×

போலி மென்பொருள் பயன்படுத்தி ரயில் டிக்கெட்டுகள் விற்ற 2 பேர் கைது ₹1.75 லட்சம் டிக்கெட், கணினி பறிமுதல்

வேலூர், அக்.16: போலி மென்பொருள் மூலம் ரயில் டிக்கெட்டுகளை பிரின்ட் அவுட் எடுத்து விற்பனை செய்த மேற்கு வங்கத்தை சேர்ந்த ஆசாமி உட்பட 2 பேரை ரயில்வே போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ₹1.75 லட்சம் மதிப்புள்ள ரயில் டிக்கெட்டுகள், கணினி மற்றும் பிரின்டர் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். வேலூரில் ரயில் டிக்கெட்டுகளை இணையவழியில் போலி மென்பொருளை பயன்படுத்தி டவுன் ேலாடு செய்து பிரின்ட் அவுட் எடுத்து விற்பனை செய்வதாக தென்னக ரயில்வே காவல்துறை தலைவர் பிரேந்திரகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின் பேரில் சென்னை ஆவடி ரயில்வே இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி, காட்பாடி ரயில்வே சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் ஆகியோர் நேற்று வேலூரில் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் ராமகிருஷ்ணா டிராவல்ஸ் என்ற நிறுவனத்தில்தான் போலி மென்பொருள் மூலம் ரயில் டிக்கெட்டுகள் டவுன் லோடு செய்து பிரின்ட் அவுட் எடுத்து விற்பனை செய்யப்படுவதாக தெரிய வந்தது.

இதையடுத்து ராமகிருஷ்ணா டிராவல்ஸ் நிறுவனத்தில் ரயில்வே போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மேங்கோ மற்றும் ஏஎன்எம் ஆகிய போலி மென்பொருள் மூலம் இவர்களாகவே ரயில்வே டிக்ெகட்டுகளை முன்பதிவு செய்து தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து இந்த மோசடியில் ஈடுபட்ட ஹரிசங்கர், மேற்கு வங்கத்தை சேர்ந்த தாப்ஸ்குமார் தத்து ஆகிய 2 பேரை ரயில்வே போலீசார் கைது செய்தனர். மேலும் போலி மென்பொருள் மூலம் போலியாக டிக்கெட்டுகளை புக் செய்து விற்பனை செய்ய பயன்படுத்திய கணினி மற்றும் பிரின்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்ததுடன், ₹1.75 லட்சம் மதிப்புள்ள ரயில்வே டிக்கெட்டுகளையும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட ஹரிசங்கர், தாப்ஸ்குமார் தத்து ஆகிய 2 பேரும் ஏற்கனவே போலி டிக்கெட்டுகளை தயாரித்து விற்றதாக கடந்த 2019ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர் என்பதும், ஜாமீனில் வெளியில் வந்து மீண்டும் அதே வேலையை தொடர்ந்து செய்ததும்தெரிய வந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து வேலூரில் தனியார் ரயில்வே முன்பதிவு மையங்கள், டிராவல்ஸ் நிறுவனங்களை கண்காணிக்கும் பணியில் ரயில்வே போலீசார் இறங்கியுள்ளனர்.

Tags :
× RELATED முதல் வாக்காளர்கள், 5 நாளான...