புதுவையில் 7 மாதங்களுக்கு பிறகு தியேட்டர்கள் திறப்பு: சப்-கலெக்டர் ஆய்வு

புதுச்சேரி, அக். 16:   கொரோனா காரணமாக நாடு முழுவதும் மார்ச் 24ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பள்ளிகள், வணிக நிறுவனங்கள், தியேட்டர்கள், சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன. அதன் பிறகு அடுத்தடுத்து பல கட்டங்களாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. அதன்படி கடைகள், ஓட்டல்கள், கடற்கரை, பள்ளிகள் திறக்கப்பட்டு சகஜ நிலை திரும்பின. இந்த நிலையில் மத்திய அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி புதுச்சேரியில் நேற்று முதல் தியேட்டர்கள் திறக்கப்பட்டன. முதல் நாளில் 2 தியேட்டர்கள் மட்டும் திறக்கப்பட்டன. திருவள்ளுவர் சாலையில் உள்ள ஷண்முகா சினிமாஸ் மற்றும் அண்ணா சாலையில் உள்ள ராஜா தியேட்டர் மட்டும் திறக்கப்பட்டது. இந்த 2 தியேட்டரிலும் ஆங்கில டப்பிங் படங்கள் திரையிடப்பட்டன. காலை 11.45 மணிக்கு படக்காட்சி தொடங்கியது. ஊரடங்கு தளர்வுக்கு பின் முதல் நாள், முதல் காட்சி என்பதால் பொதுமக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது. 50 முதல் 100 நபர்கள் வரை மட்டுமே வந்திருந்தனர். இளைஞர்கள், இளம்பெண்கள் அதிகமாக இருந்தனர்.

ஷண்முகா தியேட்டருக்கு வந்த அனைவருக்கும் முகக்கவசம் இலவசமாக வழங்கப்பட்டது. 3டி படம் என்பதால் கண்ணாடி வழங்கப்பட்டது. அவர்கள் சமூக இடைவெளி விட்டு இருக்கையில் உட்கார வைக்கப்பட்டிருந்தனர். பார்க்கிங் கட்டணம் குறைக்கப்பட்டிருந்தது.  இதனிடையே படங்கள் திரையிடப்பட்ட 2 தியேட்டர்களையும் சப்-கலெக்டர் சுதாகர், தாசில்தார் ராஜேஷ் கண்ணா தலைமையிலான வருவாய் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டு நெறிமுறைகள் சரியாக கடைபிடிக்கப்படுகிறதா? என்பதை பார்வையிட்ட அதிகாரிகள், உரிமையாளர்களுக்கு ஆலோசனை வழங்கினர். விதியை மீறினால் தியேட்டருக்கு சீல் வைக்கப்படுமென எச்சரித்தனர். புதிய படங்கள் வராத காரணத்தால் மற்ற திரையரங்குகள் திறக்கப்படவில்லை. தீபாவளிக்கு முன்பு அனைத்து தியேட்டர்களும் திறக்கப்படலாம் என்று தெரிகிறது.

Related Stories: