×

அதிமுக முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் எவ்வித குழப்பமும் இல்லை வேலூரில் அமைச்சர் கே.சி.வீரமணி விளக்கம்

வேலூர், அக்.2:அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் எந்த குழப்பமும் இல்லை என்று வேலூரில் அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ், ஊட்டச்சத்து மாத நிறைவு விழா கண்காட்சி திறப்பு, ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 962 சுய உதவி குழுக்களுக்கு ₹54.24 கோடி கடன் வழங்குதல், தாட்கோ மூலம் 17 பயனாளிகளுக்கு தலா ₹20 ஆயிரம் வீதம் ₹3.40 லட்சம் நிதியுதவி வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். மகளிர் திட்ட இயக்குனர் சிவராமன் வரவேற்றார். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலர் கோமதி திட்ட விளக்கவுரையாற்றினார். ஆவின் தலைவர் வேலழகன், வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராமு, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ஜெயபிரகாஷ், வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் ஆனந்தன் வாழ்த்துரை வழங்கினர்.

வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் கலந்து கொண்டு நிதியுதவிகளை வழங்கி பேசினர். மேலும் அரசுத் துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் காட்பாடி பெற்றோர்-ஆசிரியர் சங்க தலைவர் எஸ்ஆர்கே.அப்பு, ஜனனீ சதீஷ்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர். பின்னர் அமைச்சர் கே.சி.வீரமணி நிருபர்களிடம் கூறுகையில், ‘தமிழகத்தில் கந்து வட்டி இருக்கும் இடம் தெரியாமல் செய்யப்பட்டுள்ளது. அதிமுகவில் பாசறை மூலமாக உறுப்பினர் சேர்க்கை அதிகரித்துள்ளது’ என்றார். அப்போது அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் தொடர்ந்து குழப்பம் நிலவி வருவது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ‘முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் எந்த குழப்பமும் இல்லை. அந்த முடிவு கட்சி தலைமை சம்பந்தப்பட்டது’ என்று கூறியபடி வேகவேகமாக புறப்பட்டு சென்றுவிட்டார்.

Tags : KC Veeramani ,Chief Ministerial ,candidate ,AIADMK ,Vellore ,
× RELATED வாக்காளர்களுக்கு வழங்கப்பட இருந்த...