கோமுகி அணை பாசனத்துக்கு திறப்பு

கள்ளக்குறிச்சி, அக். 2: சம்பா பருவ சாகுபடிக்காக கோமுகி அணை திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் கோமுகி அணையின் நீர்மட்டம் 46 அடியாகும். அணையின் பாதுகாப்பு கருதி 44 அடி மட்டுமே சேமிப்பது வழக்கம். கடந்த சில நாட்களாக கல்வராயன்மலையில் பெய்து வரும் மழையின் காரணமாக அணை நிரம்பியது. மேலும் உபரி நீர் ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதையடுத்து சம்பா பருவ சாகுபடிக்கு அணையை முன்கூட்டியே திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அக்டோபர் 1ம் தேதி கோமுகி அணை திறக்கப்படும் என்று அறிவித்தார்.

 கோமுகி அணை திறப்பு விழா நேற்று நடந்தது. எம்எல்ஏக்கள் உளுந்தூர்பேட்டை குமருகுரு, கள்ளக்குறிச்சி பிரபு, மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா, கூட்டுறவு சர்க்கரை இணைய தலைவர் ராஜசேகர் ஆகியோர் கோமுகி அணை பாசன கால்வாயை திறந்து வைத்தனர். இதில் முன்னாள் அமைச்சர் மோகன், முன்னாள் எம்எல்ஏ அழகுவேல்பாபு, முன்னாள்  பேரூராட்சி தலைவர் வெங்கடேசன், செயற்பொறியாளர் சிங்காரவேல், தாசில்தார் வளர்மதி, வேளாண்மை உதவி இயக்குநர் அன்பழகன்,  கோமுகி அணை உதவி பொறியாளர்  சுதர்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 10,860 ஏக்கர் பாசன வசதி பெறும்: புதிய பாசன கால்வாய் மூலம் 5000 ஏக்கர் விவசாய நிலமும், பழைய பாசன ஆற்றின் மூலம் 5860 ஏக்கர் விவசாய நிலமும் பாசன வசதி பெறும்.

அதாவது புதிய பாசன கால்வாய்மூலம் வடக்கநந்தல், மாத்தூர், மண்மலை, மாதவச்சேரி, பால்ராம்பட்டு, செல்லம்பட்டு, கரடிசித்தூர் ஆகிய 7 கிராமங்களும், பழைய பாசன ஆற்றின்மூலம் சோமண்டார்குடி, மாதவச்சேரி, மட்டிகை குறிச்சி, ஏர்வாய்பட்டினம், கடத்தூர், நல்லாத்தூர், குதிரைசந்தல் உள்ளிட்ட 33 கிராமங்களும் பாசன வசதி பெறும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர். கோமுகி அணை பாசனத்திற்காக முன்கூட்டியே திறந்ததை ஒட்டி பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Stories: