×

திருத்துறைப்பூண்டி அருகே பயிற்சி விமானம் தரையில் விழுந்து நொறுங்கியதாக பொதுமக்கள் பீதி

திருவாரூர், அக்.2: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் நேற்று பயிற்சி விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதாக பொதுமக்களிடையே பெரும் பீதி ஏற்பட்டது. இந்திய விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி மையம் தஞ்சையில் இயங்கி வருகிறது. இங்கிருந்து விமானிகளுக்கு விமானம் ஓட்ட பயிற்சி அளிக்கப்படும் நிலையில் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட பகுதிகளை ஒட்டியவாறு வானில் இந்த பயிற்சி நடைபெறும். இதன் காரணமாக பயிற்சி விமானங்கள் தாழ்வாக பறந்து செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. அதன்படி நேற்று காலை 9 மணி அளவில் பயிற்சி விமானம் ஒன்று பறந்து சென்ற வேளையில் வழக்கத்தைவிட மிகவும் குறைந்த உயரத்தில் பறந்து சென்றது. இதன் காரணமாக விமானத்தின் சத்தமானது அதிகமாக இருந்ததால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து பார்த்தனர். அப்போது வழக்கத்திற்கு மாறாக குறைந்த உயரத்தில் பறந்ததால் அச்சமும் கொண்டனர்.

இந்நிலையில் விமானம் திருத்துறைப்பூண்டி பகுதியில் வெடித்து சிதறியது போன்று பயங்கர சத்தம் சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு கேட்டது. இதனால் பொதுமக்கள் மேலும் கடும் பீதிக்கு உள்ளாகினர். இதையடுத்து பொதுமக்கள் அங்கும் இங்கும் அந்த விமானத்தை தேடி அலையத் துவங்கினர். இதேபோல் அரசு அலுவலர்கள், வருவாய் துறையினர் மற்றும் போலீசாருக்கும் இதுபோன்று பயங்கர சத்தம் கேட்ட நிலையில் அதனை உறுதிப்படுத்துவதற்காக அவர்களும் விமானத்தை தேட ஆரம்பித்தனர்.

திருத்துறைப்பூண்டியை ஒட்டியுள்ள கச்சனம், ஆலத்தம்பாடி மற்றும் திருத்துறைப்பூண்டியில் இருந்து முத்துப்பேட்டை செல்லும் வழியில் நாச்சிகுளம், எடையூர் என பல்வேறு இடங்களில் சுமார் 2 மணி நேரம் வரையில் தேடும் பணி நடைபெற்றது. ஆனால் விமானம் கிடைக்காததால் அது போன்ற ஒரு சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை என்று தெரியவந்தது. அதன்பின்னர் இதனை போலீசார் மற்றும் வருவாய்த் துறையினரும் உறுதிப்படுத்தியதையடுத்து பொதுமக்கள் பெருமூச்சு விட்டனர். இருப்பினும் விமானம் எழுப்பியதாக கூறப்படும் அதிவேக சத்தத்தில் இருந்து பொதுமக்கள் நீண்ட நேரம் வரையும் மீளமுடியாமல் வீட்டிற்குள்ளேயே கடும் அச்சத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : panic ,training plane crash ,Thiruthuraipoondi ,
× RELATED கிண்ணக்கொரையில் சிறுத்தை நடமாட்டம்: பொதுமக்கள் பீதி