நடைபயிற்சி சென்றபோது பயங்கரம் முன்னாள் கவுன்சிலர் சரமாரி வெட்டி படுகொலை

புதுச்சேரி, அக். 1: நடை பயிற்சி மேற்கொண்ட முன்னாள் கவுன்சிலரை மர்ம கும்பல் சரமாரி வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி இந்திரா நகர் தொகுதிக்கு உட்பட்ட காமராஜர் நகரை சேர்ந்தவர் மாந்தோப்பு சுந்தர் (55). இவருக்கு செல்வி என்ற மனைவியும், 2 மகளும், ஒரு மகனும் உள்ளனர். முன்னாள் கவுன்சிலரான இவர் மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.  இந்நிலையில், நேற்று காலை 8 மணியளவில் புதுவை கோரிமேட்டில் உள்ள கனரக ஊர்தி முனையத்தில் சுந்தர் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு திடீரென வந்த மர்ம கும்பல், சுந்தரை வழிமறித்து அரிவாள் மற்றும் கத்தியால் வெட்டியது. அவர்களிடமிருந்து சுந்தர் தப்ப முயன்ற நிலையில் அவரை ஓட, ஓட கும்பல் விரட்டியது. இதில் நிலை தடுமாறி அவர் தலைக்குப்புற கீழே விழுந்ததும், அவரது தலையில் சரமாரியாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் சுந்தர் பலியானதும் அக்கும்பல் அங்கிருந்து தப்பியது.

சினிமா பட பாணியில் பட்டப்பகலில் நடந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்கள் மட்டுமின்றி அங்கு லாரிகளை நிறுத்திவிட்டு ஓய்வெடுத்திருந்த டிரைவர்களும், கிளினீர்களும் கலக்கமடைந்தனர். இது குறித்து கோரிமேடு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சீனியர் எஸ்பி பிரதிக்ஷா கொடாரா, வடக்கு எஸ்பி சுபம்கோஷ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே தகவல் கிடைத்து சம்பவ இடத்தில் திரண்ட உறவினர்கள், ஆதரவாளர்கள் சுந்தரின் சடலத்தை பார்த்து கதறி அழுதனர். கோரிமேடு இன்ஸ்பெக்டர்கள் நாகராஜ், இனியன் தலைமையிலான போலீசார், கொலை செய்யப்பட்ட சுந்தரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

ரவுடியான மாந்தோப்பு சுந்தர் 2005ல் அதே பகுதியை சேர்ந்த பெரியமருது என்பவரை கொலை செய்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தார். எனவே இந்த கொலைக்கு பழிக்குப்பழியாக எதிராளிகள் அவரை தீர்த்துக் கட்டியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அதே நேரத்தில் என்.ஆர் காங்கிரஸ் பிரமுகராக இருந்த சுந்தர், அரசியல் முன்விரோதம் காரணமாகவும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.  அதன்பேரில் காவல்துறை 2 தனிப்படையை அமைத்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளது. இதில் துப்பு துலங்கிய நிலையில், சந்தேகத்தின்பேரில் சிலரை பிடித்து போலீசார் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: