×

விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழை: 1000 ஏக்கர் நெற்பயிர் தண்ணீரில் மூழ்கியது: விவசாயிகள் வேதனை

விருத்தாசலம், அக். 1: கடலூர் மாவட்டம் விருத்தாசலம், கம்மாபுரம், கருவேப்பிலங்குறிச்சி, பெண்ணாடம், மங்கலம்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் சம்பா நெல் பருவத்திற்கான நாற்று விட்டு நடவு செய்யும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் காலை வரை விடிய, விடிய கொட்டித் தீர்த்த கனமழையால், கம்மாபுரம் பகுதியில் உள்ள கோபாலபுரம், கீனனூர், தேவங்குடி, மருங்கூர், காவனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமார் 700 ஏக்கர் பரப்பளவில் நெல் பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கின.  

 சிறு, குறு விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.10 முதல் ரூ.20 ஆயிரம் வரை செலவு செய்து, நடவு பணியை மேற்கொண்ட நிலையில், ஓரே இரவில் கொட்டி தீர்த்த கனமழையால், செய்வதறியாமல் திகைத்து வருகின்றனர்.   இதுபோல் கம்மாபுரம் பகுதியில் 200 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் முற்றிலும் மூழ்கியுள்ளன.  இந்த மழையால் கம்மாபுரம் மட்டுமின்றி விருத்தாசலம், மங்கலம்பேட்டை,  கருவேப்பிலங்குறிச்சி ஆகிய பகுதிகளிலும் விவசாயிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அரசு நடவடிக்கை மேற்கொண்டு உரிய நிவாரண தொகை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

பயிரை சூழ்ந்த மழைநீர்:     முஷ்ணம் அருகே குணமங்கலம் ஊராட்சியில் மிகப்பெரிய ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் இருந்து பாசன வடிகால் வாய்க்கால் செல்கிறது. இதன் மூலம் மழை காலங்களில் விவசாயிகள் பாசன வசதி பெறுகின்றனர். தூர்வாராததால் இந்த வாய்க்கால் தூர்ந்துள்ளது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையால் விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கி நெல் பயிர்கள் நீரில் மூழ்கி 100 ஏக்கர் அளவு சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும், நாற்றுகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ளது.

Tags : Vidya ,paddy fields ,
× RELATED நெல்லையில் டிரோன்கள் பறக்கத் தடை