அரசு போட்டி தேர்வுகளுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி வகுப்பு

விழுப்புரம், அக். 1: விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது கொரோனா நோய் தொற்று காரணமாக சமூக இடைவெளியை கருத்தில் கொண்டு நேரடி பயிற்சி வகுப்புகள் நடத்த இயலவில்லை. தேர்வர்கள் வீட்டிலிருந்தபடியே தேர்வுக்கு தயாராகி வரும் நிலையில் கிராமப்பகுதி மாணவர்களும் இப்போட்டி தேர்வுகளை எளிதில் எதிர்கொள்ளும் வகையில் இணையதளத்தில் செயலி வழியாக பயிற்சி அளிக்க வழிமுறைகள் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.< www.tamilnaducareerservices.tn.gov.in > என்ற இணையதளத்தில் காணொலி வழிக்கற்றல், மின்னணு பாடக்குறிப்புகள், புத்தகங்கள், போட்டித்தேர்வுக்கான பயிற்சிகள், மாதிரித்தேர்வு வினாத்தாள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. தேர்வர்களுக்கு தங்களது பெயர், பாலினம், தந்தை, தாய் பெயர், முகவரி, ஆதார் எண் மற்றும் வேலைவாய்ப்பு பதிவு எண்ணை கொடுத்து உள்ளே நுழைந்து போட்டித்தேர்வு என்பதை தேர்வு செய்ய வேண்டும். பயனீட்டாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் வழங்கப்படும். நாம் எந்த தேர்விற்கு தயாராகிறோம்  என்பதை தேர்வு செய்து அதில் வரும் பாடக்குறிப்புகளை தமிழ், ஆங்கிலத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம், மாதிரி தேர்வுக்கான பகுதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் 10,906 இரண்டாம் நிலை காவலர் பணிக்காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடத்திற்கு இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வருகிற 26ம் தேதி கடைசி நாளாகும்.

எனவே போட்டித்தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு இலவச இணையதள பயிற்சி வகுப்புகள் விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் வருகிற 5ம் தேதி தொடங்குகிறது. இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் 94422 08674, 70108 27700 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு பதிவு செய்து பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன் பெறலாம்.இந்த தகவலை ஆட்சியர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

Related Stories:

>