காந்திஜெயந்தியை முன்னிட்டு நாளை கட்டுப்பாடுகளுடன் கிராம சபை கூட்டம் வயதானவர்கள், குழந்தைகளுக்கு தடை

சேலம், அக்.1: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நாளை கொரோனா கட்டுப்பாடுகளுடன் கிராமசபை கூட்டம் நடத்த கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆண்டுதோறும் ஜனவரி 25 குடியரசு தினம், மே 1 தொழிலாளர் தினம், ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் மற்றும் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களில் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுவது வழக்கம். அப்போது, அந்தந்த கிராமங்களில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை பணிகள், வளர்ச்சித்திட்டங்கள் மற்றும் திட்ட பயனாளிள் தேர்வு குறித்து விவாதம் நடத்தப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்படும். அதன்படி நாளை, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து கிராமங்களிலும், கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது. இக்கூட்டத்தில் 9 முக்கிய பொருட்கள் குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேசமயம், கிராம சபை கூட்டத்தை கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, ஊரக வளர்ச்சி இயக்குநர் பழனிசாமி, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘‘கிராம சபா கூட்டம் நடத்தப்படும் இடம், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிக்குள் வந்தால், கலெக்டரின் அனுமதியுடன் வேறொருநாளில் கிராம சபை கூட்டத்தை நடத்தலாம். வயதானவர்கள், கைக்குழந்தைகள் மற்றும் நோய் அறிகுறியுள்ளவர்களை கூட்டத்திற்கு அனுமதிக்க வேண்டாம். பொது வெளியில் அல்லது காற்றோட்டமான கட்டிடத்திற்குள் கூட்டத்தை நடத்தலாம். கிருமிநாசினி, கை கழுவும் வசதி ஏற்படுத்த வேண்டும். அனைவரும் மாஸ்க் அணிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு வெப்பநிலை அறியும் கருவி மூலம் பரிசோதனை மேற்கொள்வதுடன், ஒவ்வொருவரும் 6 அடி இடைவெளியில் அமர வேண்டும்,’’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: