×

போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை, அக். 1: சம்பள பேச்சுவார்த்தையை உடனடியாக துவக்க வேண்டும். அகவிலைப்படி நிலுவையின்றி வழங்க வேண்டும். ஓய்வுபெற்றோரின் பணப்பலன்களை முழுமையாக வழங்க வேண்டும். தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து ஓட்டுவதை கைவிட வேண்டும். பழைய பென்சன் திட்டத்தை அமல்செய்ய வேண்டும், விடுமுறையில் இருந்த தொழிலாளர்களின் ஊதியத்தை பிடிக்கும் செயலை கைவிட வேண்டும், கொரோனா நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழக அனைத்து தொழிற் சங்கங்கள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

மதுரை பைபாஸ் ரோட்டிலுள்ள மண்டல தலைமையகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொமுச பேரவை செயலாளர் அல்போன்ஸ் தலைமை வகிக்க, சிஐடியூ பொது செயலாளர் கனகசுந்தர், ஏஐடியூசி பொது செயலாளர் நந்தாசிங், எச்எம்எஸ் பொதுச் செயலாளர் ஷாஜகான், ஏஏஎல்எல்எப் பொதுச் செயலாளர் சங்கையா, தொமுச பொருளாளர் மணிகண்டன், கவுரவ தலைவர் பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். கே.கே.நகரிலுள்ள அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொமுச கிளை தலைவர் சலீம் தலைமை வகிக்க, சிஐடியூ செயலாளர் செந்தில், செல்லத்துரை, முருகபாண்டி, பிச்சைமணி, குமார், நாகராஜன், மனோகரன், நமச்சிவாயம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். டி.கல்லுப்பட்டி அரசு போக்குவரத்து பணிமனை முன்பு நேற்று போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொமுச மத்திய சங்க துணை செயலாளர் கிருஷ்ணன் தலைமை வகிக்க, சிஐடியூ மத்திய சங்க பொருளாளர் மாரியப்பன் முன்னிலை வகித்தார். இதேபோல் உசிலம்பட்டி அரசு போக்குவரத்து பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Tags : Transport workers ,
× RELATED போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய...