×

ஜல் ஜீவன் திட்டத்தில் குளறுபடி தரமில்லாத பொருட்களில் வேலை கான்ட்ராக்டர்கள் மீது பொதுமக்கள் புகார்

ஸ்ரீபெரும்புதூர்: மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தில் குளறுபடிசெய்து, கான்ட்ராக்டர்கள் தரமில்லாத பொருட்களில் வேலை செய்கின்றனர் என பொதுமக்கள் பரபரப்பு புகார் கூறுகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் ஆகிய 5 ஒன்றியங்கள் உள்ளன. இங்கு சுமார் 270க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில், லட்சக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். தற்போது மத்திய அரசின் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள ஊராட்சிகளில் குடிநீர் இல்லாத வீடுகளுக்கு, இலவச குடிநீர் இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து ஒன்றிய ஊராட்சிகளில் குடிநீர் இணைப்பு இல்லாத வீடுகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தபட்டது.

இதையொட்டி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 5 ஒன்றியத்தில் அடங்கி உள்ள ஊராட்சிகளில் புதிய குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி, ஆழ்துளை கிணறு மற்றும் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க கடந்த மாதம் டெண்டர் விடபட்டது.
இதில், டெண்டர் எடுத்த கான்ட்ராக்டர்கள், குடிநீர் இணைப்பு வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், மேற்கண்ட ஒன்றியங்களில் குடிநீர் இணைப்பு வழங்குவதில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜல்ஜீவன் திட்டம் மூலம் கான்ட்ராக்ட் எடுத்தவர்கள், லாப நோக்கத்தை கணக்கில் கொண்டு, குறைந்த விலையில் தரமில்லாத பைப்கள் கொண்டு குடிநீர் இணைப்பு வழங்குகின்றனர். இந்த பைப்புகள் ஓரிரு மாதத்தில் சேதமாகிவிடும்.

இந்த முறைகேடுக்கு அதிகாரிகள் பக்க பலமாக துணை நிற்கின்றனர். மேலும், மாவட்டத்தில் மொத்தமாக பணிகள் டெண்டர் விட்டதால், சிவில் கான்ட்ராக்டர்களுக்கும் பணிகள் கொடுக்கபட்டுள்ளன. அவர்களால் பணியை முடிக்க முடியாமல் திணறுகின்றனர். குன்றத்தூர் ஒன்றியத்தில் ஓரிரு இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. ஆனால் பணிகள் வேகமாக நடப்பதாக மாவட்ட நிர்வாகத்துக்கு தவறான தகவல் அளிக்கின்றனர். இதேநிலை நீடித்தால் இந்த திட்டம் முழுமையடைவதில் சிக்கல் ஏற்படும். இதில், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, முறைகேடுகளை தடுக்க வேண்டும். பணிகளை ஆய்வு செய்து, குளறுபடி நடக்கும் இடத்தில், டெண்டர் எடுத்த கான்ட்ராக்டர்களை மாற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

* முன்கூட்டியே 10 சதவீத கமிஷன்
ஜல் ஜீவன் திட்ட பணிகளுக்கு டெண்டர் எடுத்தவர்களிடம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு பெண் அதிகாரி, அமைச்சருக்கு கமிஷன் தொகை கொடுத்தால் மட்டுமே பணி செய்ய வேண்டும் என கூறி முன்கூட்டியே 10 சதவீத கமிஷனை வசூலித்துள்ளார். அதில்கமிஷன் தராத ஒரு சில கான்ட்ராக்டர்களுக்கு பணிகள் செய்ய அனுமதிக்காமல், இழுத்தடிப்பு செய்கிறார். இதனால், அமைச்சர், மாவட்ட அதிகாரிகள், சம்பந்தப்பட்ட ஒன்றிய அதிகாரிகள், ஊராட்சி செயலர் என பல்வேறு அதிகாரிகளுக்கு கமிஷன் கொடுக்க வேண்டியுள்ளது. இதில் மீதமுள்ள தொகையை வைத்து, தரமான பொருட்களை வாங்க முடியாது. அதே நேரத்தில், வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன் இந்த பணியை முடிக்க வேண்டும் என அழுத்தம் தருகிறார்கள். நாங்கள் என்ன செய்வது என கான்ட்ராக்டர்கள் புலம்புகின்றனர்.

Tags : contractors ,
× RELATED நாடாளுமன்ற தேர்தல் எதிரொலி: ...