×

போராட்டத்தில் ஈடுபட்டதால் பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் செங்கொடி சங்கத்திலிருந்து விலகல்: மீண்டும் வேலை கோரி ஆணையருக்கு கடிதம்

சென்னை: போராட்டத்தில் ஈடுபட்ட காரணத்தால் பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் மீண்டும் பணி வழங்க வேண்டும் என மாநகராட்சி ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், நாங்கள் பிஎம்எஸ் சங்கத்தில் சேர்ந்து விட்டோம் என்று குறிப்பிட்டுள்ளனர். குறைந்தபட்ச ஊதியம் ரூ.16,725 வழங்க வேண்டும், துப்புரவு பணியை தனியாருக்கு அளிக்க கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ரிப்பன் மாளிகை வாயிலில் செங்கொடி சங்கத்தைச் சேர்ந்த 1500க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட 291 பேரை பணி நீக்கம் செய்து மாநகராட்சி உத்தரவிட்டது.

தொடர்ந்து, ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் பணிநீக்கம் செய்யப்பட்ட 291 பணியாளர்களை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்பட்டதை தொடர்ந்து, போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களில் சிலர் தங்களை மீண்டும் பணியில் சேர்க்கக் கோரி மாநகராட்சி ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், நாங்கள் செங்கொடி சங்கத்தில் இருந்து விலகிவிட்டோம் என்றும் பாஜவின் சங்கமான பிஎம்எஸ் சங்கத்தில் இணைந்து விட்டோம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

* அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கடந்த 7.9.20ம் தேதி அன்று பணிநிரந்தரம், ஊதிய உயர்வு, நிலுவைத் தொகை, ரூ.2 லட்சம் பெற்று தருவதாக தவறான தகவல்களை சொல்லி சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கத்தினர் எங்களை போராட்டத்திற்கு அழைத்து சென்றனர். அது தவறு என்று நாங்கள் மனப்பூர்வமாக உணர்ந்துவிட்டோம். இந்த செங்கொடி சங்கத்தில் இருந்து நாங்கள் அனைவரும் விலகிவிட்டோம். தற்போது பிஎம்எஸ் சங்கத்தில் சேர்ந்துவிட்டோம். 7ம் தேதி நடந்த சம்பவத்திற்கு நாங்கள் அனைவரும் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். எங்களை மன்னித்து மீண்டும் பணியில் அமர்த்த பணிவுடன் கேட்டுகொள்கிறோம். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Tags : Commissioner ,Union ,
× RELATED புதுக்கோட்டையில் ரூ. 1 லட்சத்திற்கு...