திடீர் இடி, மின்னலால் தரையிறங்க முடியாமல் விமானங்கள் தவிப்பு

சென்னை: சென்னையில் திடீரென சூறைக்காற்று, இடி, மின்னல், மழை பெய்ததால் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் 3 விமானங்கள் வானிலேயே வட்டமடித்தது.  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை திடீரென பலத்த சூறைக்காற்று, இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதனால் சென்னை விமான நிலையத்தில் சுமார் ஒரு மணி நேரம் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. மதுரையிலிருந்து சென்னைக்கு 81 பயணிகளுடன் வந்து கொண்டிருந்த தனியார் பயணிகள் விமானம் சென்னையில் மாலை 5.20 மணிக்கு தரையிறங்கவேண்டும்.  

அப்போது, சென்னை விமான நிலைய பகுதியில் பலத்த சூறைக்காற்று, இடி, மின்னல் இருந்ததால் விமானம் தரையிறங்க விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் அனுமதி தரவில்லை. விமானத்தை வானிலேயே தொடர்ந்து வட்டமடிக்கச் செய்தனர். அதைப்போல் தோகாவிலிருந்து 128  பயணிகளுடன் மாலை 5.15 மணிக்கு தரையிறங்க வந்த மீட்பு சிறப்பு  விமானம், குவைத்திலிருந்து மாலை 5.45 மணிக்கு சென்னையில் தரையிறங்க வேண்டிய சரக்கு விமானம் ஆகியவைகளும் தரையிறங்க முடியாமல் வானில் தொடர்ந்து வட்டமடித்தன. பின்னர் மாலை 6 மணிக்கு மேல் வானிலை சீரடைந்ததும் 3 விமானங்களும் ஒன்றன் பின்பு ஒன்றாக தரையிறங்கின. இதனால் சென்னை விமான நிலையத்தில் நேற்று மாலை 5 மணியிலிருந்து ஒரு மணிநேரம் விமான சேவைகள் பாதித்தன.

Related Stories: