×

டெங்குவை தடுக்க மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதா? மத்திய அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை: டெங்கு பரவாமல் தடுப்பதற்காக மருந்துகள் கண்டுபிடுக்கப்பட்டுள்ளதா என்று மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
  சென்னையில் டெங்கு பரவும் அபாயம் உள்ளது என்றும் சட்டவிரோதமாக பொது இடங்கள், சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்களில் தண்ணீர் தேங்கி டெங்கு கொசு உருவாக வாய்ப்பு உள்ளது. எனவே, அந்த சட்டவிரோத வாகனங்களை அகற்றுமாறு உத்தரவிட வேண்டும் எனக்கோரி வக்கீல் ஏ.பி.சூரியபிரகாசம் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநகராட்சி சார்பில் ஆஜரான வக்கீல் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கை குறித்து ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார்.

அறிக்கையை படித்துப் பார்த்த நீதிபதிகள், நடவடிக்கையில் குறைபாடுகள் உள்ளன. அதை நிவர்த்தி செய்ய வேண்டும். சாலைகள், வீடுகள், பொது இடங்களில் சட்ட விரோதமாக நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும்.  அதற்கு போக்குவரத்து போலீசார் உரிய உதவிகளை மாநகராட்சிக்கு செய்து தர வேண்டும். கொசுக்கள் உருவாவதை தடுக்கவும், நோய் தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? மருந்துகள் இருந்தால் அவற்றை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் மற்றும் மத்திய அரசு பதில் தரவேண்டும். இந்த பிரச்னை  தொடர் பிரச்னை என்பதால் வழக்கு 2021 ஜனவரி 5ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.

Tags : ICourt ,Central Government ,
× RELATED 2021-ல் கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில்...