வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள மாவட்ட அளவில் சிறப்புக்குழுக்கள் அமைப்பு கலெக்டர் தலைமையில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் முடிவு

வேலூர், செப்.30: வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தற்போதைய வடகிழக்கு பருவ மழையின்போது மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது. எஸ்பி செல்வகுமார், டிஆர்ஓ பார்த்தீபன், திட்ட இயக்குனர் மாலதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கலெக்டர் சண்முகசுந்தரம் பேசியதாவது: ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையினால் மட்டுமே அதிக மழை பொழிவு இருக்கும். வடகிழக்கு மழையின் இயல்பான அளவு 364.5 மிமி. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு 26 சதவீதம் குறைவாக பெய்தது. கடந்த 2019ம் ஆண்டு வடகிழக்கு பருவ மழையை கருத்தில் கொண்டு வெள்ள பாதிப்பு பகுதிகளாக 34 பகுதிகளும், மித பாதிப்பு பகுதிகளாக 11 பகுதிகளும், குறைவான பாதிப்பு பகுதிகளாக 33 பகுதிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதில் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு 380 முதல்நிலை பொறுப்பாளர்களும், கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் 137 முதல்நிலை பொறுப்பாளர்களும், மழையால் விழும் மரங்களை அகற்றவும், கோடையில் மரங்களை நடவும் 112 முதல்நிலை பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பொறுப்பில் 42 நிவாரண மையங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வெள்ள பாதிப்பு பகுதிகளின் வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு ஆர்டிஓக்கள், மண்டல அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் சார்பில் துறை அலுவலர்கள் விவரம், தொலைபேசி எண்கள் அடங்கிய கையேடுகள் தயாரிக்கப்பட்டுள்ளது. பேரிடர் கால தொடர்புக்காக 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணும் உள்ளது.

அதோடு வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள ஆர்டிஓ தலைமையில் வருவாய், ஊரக வளர்ச்சி, வேளாண்மை, மின்சாரம், பொது சுகாதாரத்துறை என 11 துறைகளை சேர்ந்த அலுவலர்கள் கொண்ட வடட்ட அளவிலான 6 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் இந்திய செஞ்சிலுவை சங்கம் உட்பட பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செயல்படும்.

அதேபோல் பொது சுகாதாரத்துறை, நெடுஞ்சாலைத்துறை, தீயணைப்புத்துறை, பொதுப்பணித்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மாநகராட்சி, நகராட்சிகள் என உள்ளாட்சி அமைப்புகளும் என அனைத்துத்துறைகளும் பருவமழை பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையில் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

Related Stories:

>