பொய்கை மாட்டுச்சந்தையில் விதிமீறல் சமூக இடைவெளி, முகக்கவசமின்றி குவிந்த பொதுமக்கள்

வேலூர், செப்.30: வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தையில் தடை நீங்காத நிலையில் நேற்று ஏராளமானோர் முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளியின்றி குவிந்தனர். இதனால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், பெரும்பாலான வாரச்சந்தைகளுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. ஆனாலும் மக்களின் அத்தியாவசிய தேவையை கருத்தில் கொண்டு வாரசந்தையை விட்டு வேறு இடங்களிலோ சாலையோரங்களிலோ இடைவெளி விட்டு காய்கறி கடைகள் வைக்கப்படுகின்றன.

ஆனால், வேலூர் அடுத்த பொய்கை மாட்டுசந்தை செயல்பட தடை விதிக்கப்பட்ட நிலையில், கடந்த சில வாரங்களாக அனுமதியின்றி வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கோழி, மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று வெளியூர்களில் இருந்து கால்நடைகள் ஏதும் வராத நிலையில் உள்ளூரை சேர்ந்த விவசாயிகள் மாடு விற்பனைக்காக கொண்டு வந்தனர். மேலும் கோழி வியாபாரிகளும், காய்கறி வியாபாரிகளும் பெருமளவில் குவிந்தனர். இவற்றை வாங்க பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்களும் பெருமளவில் திரண்டு வந்திருந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் முக கவசம் அணியாமலும், சமூக இடைவௌியின்றியும் திரண்டிருந்தனர்.

இதனால் கொரோனா தொற்று அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும் மத்திய, மாநில அரசுகள் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், பொது இடங்களில் சமூக இடைவெளியை மறந்து விடுவதால் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories:

>