×

ஆணையாளரை கண்டித்து ஒன்றிய குழு கூட்டத்தில் திமுக அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு 28 தீர்மானங்கள் மீது கையெழுத்திட மறுப்பு

கெங்கவல்லி, செப்.30:  கெங்கவல்லி ஊராட்சி ஒன்றிய சாதாரண கூட்டம், ஒன்றியக்குழு தலைவர் பிரியா தலைமையில் நேற்றுமுன்தினம் நடந்தது. மாவட்ட கவுன்சிலர் ராஜா, ஒன்றியக்குழு துணை தலைவர் விஜயேந்திரன், ஒன்றிய ஆணையாளர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 28 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது. தொடர்ந்து விவாதம் நடந்தது. துணைத் தலைவர் விஜயேந்திரன் பேசுகையில், ‘ஒன்றிய கூட்டத்தில் கிராம ஊராட்சி ஆணையாளர் கலந்துகொள்வதில்லை. அரசின் திட்டங்களை செயல்படுத்தும் போது கவுன்சிலர்களை ஆலோசிக்காமல், தன்னிச்சையாக முடிவு செய்கிறார். கவுன்சிலர்கள் கொடுக்கும் பணியை கிடப்பில் போட்டு விடுகிறார். எனவே, ஆணையாளர் கூட்டத்துக்கு எப்போது வருகிறாரோ, அப்போது தான் நான் தீர்மானத்தில் கையெழுத்திடுவேன்,’ என கூறினார்.

மாவட்ட கவுன்சிலர் ராஜா பேசுகையில் ‘அடுத்த கூட்டத்தில் கிராம ஊராட்சி ஆணையாளர் கலந்து கொள்ளவில்லை என்றால், முறையாக தீர்மானம் வைத்து, இதனை கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்படும்,’ என்றார். தொடர்ந்து கூட்டத்தில் வாசிக்கப்பட்ட 28 தீர்மானத்திற்கும், திமுக, அதிமுக ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் பாமக ஒன்றியக்குழு துணைத்தலைவர் ஆகிய 11 பேர் கையெழுத்திடாமல் வெளிநடப்பு செய்தனர். கெங்கவல்லி கிராம ஊராட்சி ஆணையாளர் செல்வம், கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் பணியில் சேர்ந்தார். கடைசியாக ஜூலை மாதம் நடந்த கூட்டத்தில் மட்டுமே பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : councilors ,DMK ,commissioner ,meeting ,Union Committee ,
× RELATED தமிழகம், புதுச்சேரி 40 தொகுதிகளிலும்...