இன்ஜினியர் தற்கொலை

சேலம், செப்.30: சேலம் பெரியபுதூர் கே.எம்.எஸ். கார்டன் பகுதியை சேர்ந்தவர் சுமதி. அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் விக்னேஷ்(23), நாமக்கல் தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் படித்து முடித்துள்ளார். கணவரை விவாகரத்து செய்த ஆசிரியை சுமதி, மகனுடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் நண்பர்களுடன் சேர்ந்து விக்னேஷ் மதுப்பழக்கத்திற்கு அடிமையானார். இவருக்கு கஞ்சா பழக்கமும் உள்ளது. இதனால் தாயுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, தாய் சுமதி, பேர்லாண்ட்ஸ் போலீஸ் ஸ்டேசனுக்கு வந்து மகன் மீது புகார் கொடுத்தார். கார் வேண்டும் என கேட்டு தகராறு செய்ததுடன், கத்தியால் கையை அறுத்துக்கொண்டதாகவும், தன்னை கொன்று விடுவதாக மிரட்டுவதாகவும் புகாரில் கூறினார்.

இதையடுத்து, விக்னேசை அழைத்த போலீசார், அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை, அவரது நண்பர்கள் வீட்டிற்கு வந்த போது, விக்னேஷ் தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அவரது சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். அப்ேபாது அவர் ஆங்கிலத்தில் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றை போலீசார் கண்டெடுத்தனர். அதில் அவர், ‘‘அம்மா இருந்தும் அன்பு காட்ட ஆள் இல்லாததால் அனாதையாகி விட்டேன். அம்மாவின் நடவடிக்கை சரியில்லை,’’ என கூறியுள்ளார். இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.

Related Stories: