×

கல்லல் அருகே வாகன விபத்து தொடர்ந்து அதிகரிப்பு நெடுஞ்சாலையில் பாலம் அமைக்க வலியுறுத்தல்

சிவகங்கை, செப்.30:  கல்லல் அருகே நெடுஞ்சாலையில் பாலம் இல்லாததால் வாகனங்கள் விபத்திற்குள்ளாகி வருகின்றன. திருச்சி மற்றும் தஞ்சாவூரில் இருந்து காரைக்குடி, கல்லல், காளையார்கோவில் வழியாக பரமக்குடி செல்லும் நெடுஞ்சாலை உள்ளது. திருச்சி-பரமக்குடி, தஞ்சாவூர்-பரமக்குடிக்கு இந்த சாலையே மிக முக்கியமான சாலையாகும். இதில் பகல் இரவு என அனைத்து நேரங்களிலும் பஸ்கள் வந்து செல்கின்றன. இச்சாலையில் கல்லல் அருகே அரண்மனைசிறுவயல், வெற்றியூர் நான்கு ரோடு விலக்கிற்கு இடையே சுமார் 50 மீட்டர் தொலைவிற்கு தரைப்பாலம் உள்ளது.

சாலையின் மட்டத்தில் இருந்து சுமார் ஐந்தடி ஆழத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட இந்த தரைப்பாலம் இருக்கும். தரைப்பாலத்தின் மீதும் தார்ச்சாலை அமைக்கப்பட்டிருக்கும். ஐந்தடி பள்ளத்தில் இருப்பதால் இப்பகுதியில் வழக்கமாக வரும் வாகன ஓட்டிகளை தவிர புதிதாக வருபவர்களுக்கு தரைப்பாலம் குறித்து தெரியாது. இதனால் வாகன ஓட்டிகள் நிலை குலைந்து போவர். சாலையில் இருந்து ஐந்தடி பள்ளத்தில் 5 0மீட்டர் தூரத்திற்கு பயணம் செய்து மீண்டும் மேடான சாலையில் ஏற வேண்டும். ஐந்தடி பள்ளத்தில் வாகனங்கள் செல்லும் போது மேடான சாலையில் வரும் வாகனங்களுக்கு சிறிது தூரும் கீழே வாகனங்கள் வருவது தெரிவதில்லை.

இதுபோன்ற குழப்பங்களால் தொடர்ந்து விபத்துகள் நடந்து வருகின்றன. மேடான பகுதியில் இருந்து பள்ள பகுதிக்கு வாகனங்கள் செல்லும் போது சாலையில் இரு புறமும் உள்ள பள்ளங்களில் வாகனங்கள் கவிழ்கின்றன. தரைப்பாலம் உள்ள 50 மீட்டர் தூரத்திற்கு நீண்ட பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. வாகன ஓட்டிகள் கூறியதாவது:அதிக போக்குவரத்து உள்ள நெடுஞ்சாலையில் பாலம் அமைக்காமல் உள்ளனர். தொடர்ந்து விபத்துகள், தரைப்பாலத்தில் நீர் வரும் போது வாகனங்களை ஓட்ட முடியாதது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டும் பாலம் அமைக்கப்பட வில்லை. உடனடியாக பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : bridge ,highway ,car accident ,Kallal ,
× RELATED வேலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில்...