×

சத்துணவு பணிக்கு விண்ணப்பிக்க வந்த பெண்களை மிரட்டி விரட்டிய அலுவலரால் பரமக்குடியில் பரபரப்பு

பரமக்குடி, செப்.30:  பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவி சமையலர் பணிக்கு விண்ணப்பிக்க வந்த பெண்களை மிரட்டும் தோரணையில் விரட்டிய பெண் அலுவலரால் சலசலப்பு ஏற்பட்டது. பரமக்குடி ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகர்ப்புறத்தில் உள்ள பள்ளிகளில் சமையலர், உதவி சமையலர், சத்துணவு அமைப்பாளருக்கான காலிப்பணியிடங்களுக்கு தகுதியான பெண்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதன் அடிப்படையில், நேற்று பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராம மற்றும் பரமக்குடி நகர் பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் விண்ணப்பிப்பதற்காக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குவிந்தனர்.

அங்கு பணியாற்றும் பெண் அலுவலர்கள் விண்ணப்பங்களை சரி செய்து பெற்றுக் கொள்ளும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, சத்துணவு பிரிவில் பணியாற்றும் அலுவலர் விண்ணப்பத்தில் தவறு அல்லது ஆவணங்கள் இணைக்கப்படாமல் இருந்தால், கடும் கோபத்துடன் ஆவணங்களை வீசுவதும், மரியாதை இல்லாமல் பேசுவதும், மிரட்டும் தோரணையில் விரட்டி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் சிலர், பெண் அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், ஒன்றிய அலுவலகத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. கிராமப்புறத்தில் இருந்து வரும் பெண்களுக்கு போதுமான விவரம் தெரியாத நிலையில் எடுத்துக் கூறாமல், விரட்டியடிப்பது வேதனை அளிப்பதாக அங்கிருந்த பெண்கள் தெரிவித்தனர். விண்ணப்பிக்க வந்த பெண்களுக்கு முறையான கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி கொடுக்காமலும், போதுமான இருக்கை வசதி செய்யாமல் சமூக இடைவெளியின்றி நின்றனர்.

Tags : women ,officer ,Paramakudi ,
× RELATED மக்களவை தேர்தலில் வாக்களிக்க...