×

இயங்கும் எக்ஸ்பிரஸ்கள்... முடங்கிய பாசஞ்சர்கள் பயணிகள் ரயிலுக்கு ‘பச்சைக்கொடி’ எப்போது? சிறு வியாபாரிகள், அடித்தட்டு மக்கள் எதிர்பார்ப்பு

மதுரை, செப் 30: அடித்தட்டு மக்கள், சிறு - குறு வியாபாரிகளின் நலன் கருதி, பயணிகள் ரயில்களையும் முழுமையாக இயக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, கடந்த மார்ச் 23ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தற்போது பல்வேறு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. பொதுப் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டு பஸ் போக்குவரத்து துவங்கியுள்ளது. சிறப்பு ரயில்களும், எக்ஸ்பிரஸ் ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், பாசஞ்சர் ரயில்கள் எனப்படும் பயணிகள் ரயில் சேவை இன்னும் துவக்கப்படவில்லை. இதனால், இதை நம்பியுள்ள அடித்தட்டு மக்கள், சிறு குறு வியாபாரிகளின் சோகம் தொடர்கிறது.

மதுரை கோட்டத்தில் மதுரை - மானாமதுரை, மதுரை - திண்டுக்கல், மதுரை - செங்கோட்டை, மதுரை - ராமேஸ்வரம், நெல்லை - ஈரோடு / மயிலாடுதுறை போன்ற சாதாரண பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டன. பயணிகள் ரயில்களில் கட்டணம் மிகவும் குறைவு. இந்த ரயில்களால் லட்சக்கணக்கான அடித்தட்டு மக்கள் பயன் அடைந்தனர். தற்ேபாது இந்த ரயில்கள் இயங்காததால் இவர்கள் பொருளாதாரரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் செப். 1ம் தேதி முதல் பொது போக்குவரத்து துவங்கி விட்டது.  சென்னையில் செப். 7ம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவையும் தொடங்கிவிட்டது. ஆனால் பயணிகள் ரயில்கள் இயக்கப்படாமல் இருப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பயணிகள் ரயில்கள் இயங்கினால்தான், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், கட்டிடத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழிலாளர்கள் மற்றும் மாணவ - மாணவியர், உடல்நலம் பாதிப்புள்ளவர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் தங்கள் பணிகளில் ஈடுபட முடியும்.

பயணிகள் ரயில்களில் தினமும் பயணிக்கும், பல்லாயிரக்கணக்கான, சிறு வியாபாரிகள், அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும், சீசன் டிக்கெட் எடுத்துக்கொண்டு மிகவும் குறைந்த கட்டணத்தில் பணிகளுக்கு சென்று திரும்பினர். தற்போது பயணிகள் ரயில்கள் இல்லாததால், 3 மடங்கிற்கும் மேலாக அதிக கட்டணத்தை கொடுத்து பஸ்களில் பயணிக்கின்றனர். இதற்கு, தங்களின் ஊதியத்தில் பெரும் பகுதியை செலவிடவேண்டிய நிலை உள்ளது. தங்களது நலனைக் கருத்தில் கொண்டு பயணிகள் ரயில்களை விரைவில் இயக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

Tags : Passengers ,passenger train ,traders ,
× RELATED செங்கல்பட்டு புறவழிச்சாலையில் லாரி...