குடிமகன்களின் கூடாரமாகும் வாரச்சந்தை வளாகம்

காங்கயம், செப்.30: காங்கயம் பஸ் நிலையம் அருகே செயல்பட்டு வரும் வாரச்சந்தை போதிய பாதுகாப்பின்றி குடிமகன்களின் கூடாரமாக மாறி வருகிறது. நகராட்சி நிர்வாகம், போலீசார் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். காங்கயம் வாரச்சந்தை மிகப்பெரிய சந்தையாகும். வாரந்தோறும் திங்கட்கிழமையன்று நடைபெறும் இந்த சந்தைக்கு திருப்பூர், கோவை, கரூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகளும் வருவார்கள். மேலும், காஙகயம் சுற்று வட்டார பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்கள் விளைவித்த விளைபொருட்களையும், வியாபார பொருட்களையும் கொண்டு வந்து இந்த சந்தையில் விற்று தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வது வழக்கம்.

மேலும், காங்கயம் சுற்று வட்டார பகுதியில் செயல்படும் பனியன் கம்பெனிகள் மற்றும் இதர வர்த்தக நிறுவனங்களில் வேலை செய்யும் ஏராளமாக வட மாநில தொழிலாளர்களும் இந்த சந்தையில் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். சந்தை வளாகத்தை ஒட்டியே காங்கயம் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமான இடத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு செல்ல தனியாக வழித்தடம் உள்ளது. சந்தைக்கும், டாஸ்மாக் கடைக்கும் இடையில் கம்பிவேலி அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேலி சில அடி தூரம் அகற்றப்பட்டு சந்தையில் இருந்து செல்ல வழித்தடமாக உள்ளது. கடையில் தற்போது பார் வசதி இல்லாமல் உள்ளதால் இங்கு வரும் குடிமகன்கள் கடையில் சரக்கு வாங்கியவுடன் சந்தை வளாகத்தில் அமர்ந்து மது அருந்துகின்றனர்.

சந்தையில் கடைக்காரர்கள் கடைகள் அமைக்க மிகக் குறைவான அளவே கடை மேடைகள் உள்ளன. அதுவும் பராமரிப்பின்றி காட்சியளிக்கிறது. இந்த கடை மேடைகளில் காலை முதல் மாலை வரை குடிமகன்கள் சரக்கு பாட்டில்களை வாங்கி வந்து குடிப்பதுடன், காலி பாட்டில்களை உள்ளேயே உடைத்து போட்டுவிடுகின்றனர். இதனால், உடைந்த கண்ணாடி பாட்டில் சிதறல்கள் சந்தைக்கு வருவோரின் கால்களை பதம்பார்க்கிறது. வரி வசூல் செய்யும் நகராட்சியும் இது குறித்து கண்டுகொள்வதில்லை. இந்த டாஸ்மாக் கடையில் அதிகாலை முதலே சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்று வருகிறது. இதை போலீசாரும் கண்டுகொள்வதில்லை.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாரது:

காங்கயம் சுற்று பகுதியில் முக்கிய சந்தையாக வாரச்சந்தை செயல்படுகிறது. சந்தை கூடும் திங்கள்கிழமை தவிர்த்து ஏனைய நாட்கள் திறந்தே கிடக்கும். இதனால், பகலில் குடிமகன்கள் சரக்கு பாட்டில்களை வாங்கி வந்து கூட்டமாக அமர்ந்து மது அருந்திவிட்டு பாட்டில்களை உடைத்து போட்டுகின்றனர். ஏற்கனவே, இருந்த கம்பி வேலியை குடிமகன்கள் அகற்றி உள்ளனர். டாஸ்மாக் கடை இருக்கும் இடம் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ நடராஜ் என்பவருக்கு சொந்தமானது. அவரிடம் கம்பிவேலியை சரிசெய்ய வேண்டும் என கூறி உள்ளோம். காங்கயம் நகராட்சி கமிஷனரிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. குடிமகன்களால் சந்தைக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. காங்கயம் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டு குடிமகன்களின் மது அருந்துவதை தடுக்க வேண்டும். சந்தை நடக்கும் நாட்களில் போலீசார் காலை முதல் மாலை வரை வளாகத்தில் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: