ரூ.10 ஆயிரம் கடன் தர வங்கிகள் அலைக்கழிப்பு

கோவை, செப். 30: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்  சுமார் 6 ஆயரத்திற்கும் மேற்பட்ட பதிவு பெற்ற சாலையோர வியாபாரிகள் உள்ளனர். பதிவு பெறாமல் சுமார் 12 ஆயிரம் சாலையோர வியாபாரிகள் உள்ளனர். கொரோனா  ஊரடங்கு காரணமாக சாலையோரம் மற்றும் நடைபாதை வியாபாரிகள் வாழ்வாதாரம்  முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் சிறப்பு கடன் வழங்கப்படும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. ஆனால் இதனை பெற சாலையோர வியாபாரிகள் அலைக்கழிப்பு செய்யப்படுவதாக வியாபாரிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து கோவை மாவட்ட சாலையோர மற்றும் நடைபாதை வியாபாரிகள் நலச்சங்கம் தலைவர் மணி கூறுகையில், ‘‘கோவை மாநகர் முழுவதும் சாலையோர வியாபாரிகள் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வாழ்வா, சாவா என்கிற நிலையில் உள்ளனர். இதனிடையே அரசால் அறிவிக்கப்பட்ட ரூ.10 ஆயிரம் கடனை பெற வங்கிகளிடம் சென்று கேட்டால் அலட்சியம் செய்கிறார்கள். 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதிவு பெற்ற சாலையோர வியாபாரிகள் உள்ளனர். இதில் இதுவரை 975க்கும் மேற்பட்டோருக்கு 10 ஆயிரம் கடன் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. மீதம் உள்ளவர்களுக்கு இந்த கடன் உடனே கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வங்கிகளின் நடவடிக்கையால் சாலையோர வியாபாரிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்’’ என்றார்.

Related Stories: