×

மாவட்டத்தில் சத்துணவு அமைப்பாளர் பணிக்கு 2,900 பேர் விண்ணப்பம்

ஈரோடு, செப். 30:   ஈரோடு மாவட்டத்தில் சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர் காலி பணியிடத்திற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். இதில், நேற்று வரை  2,900 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் சத்துணவு அமைப்பாளர் நிலையில் 93 காலி பணியிடங்களுக்கும், சமையலர் நிலையில் 11 காலி பணியிடங்களுக்கும், சமையல் உதவியாளர் நிலையில் 97 காலி பணியிடங்களுக்கு என மொத்தம் 201 காலி பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் இனசுழற்சி அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடங்களுக்கு 24ம் தேதி முதல் விண்ணப்பிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. விருப்பமுடையவர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்களில் விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்க இன்றே (30ம் தேதி) கடைசி நாள் ஆகும்.

இதனால், ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர் பணியிடத்திற்கு 100க்கும் மேற்பட்ட பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து விண்ணப்பித்தனர். இதேபோல், மாவட்டம் முழுவதும் ஏராளமான விண்ணப்பங்கள் குவிந்து வருகிறது. இதில், நேற்று வரை 2,900 பேர் விண்ணப்பித்துள்ளனர். இது குறித்து மாவட்ட சத்துணவு திட்ட அதிகாரிகள் கூறியதாவது: சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர் என மூன்று பதவிகளிலும் மொத்தம் 201 காலி பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடத்திற்கு கடந்த 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை மூன்று நாட்களில் 1,400 பேர் விண்ணப்பித்திருந்தனர். வி.ஏ.ஓ. சான்று, வருவாய் சான்று, தேவையான ஆவணங்களை விண்ணப்பதாரர்கள் பெறுவதில் தாமதம் ஏற்பட்டதால், கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 1,500 விண்ணப்பம் என மொத்தம் 2,900 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. ஒரே நபர், இரு பதவிக்கும், இரு வேறு இடங்களில் உள்ள சத்துணவு மையங்களுக்கும் விண்ணப்பித்துள்ளனர்.

இதில், 900 விண்ணப்பங்கள் வரை, ஒரே நபர் இரு பணியிடத்திற்கும், இரு மையங்களுக்கு விண்ணப்பம் செய்தவையாகும். அவரது தகுதி, தூரம், சிறப்பு தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இது தவிர, விதவை, ஆதரவற்ற விதவை, கணவரால் கைவிடப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோரும், வெவ்வேறு இடங்களிலும், இரண்டு பணிக்கும் விண்ணப்பம் வழங்கி உள்ளனர். இந்த விண்ணப்பங்களில், ஆவணங்கள் இணைப்பதில் குறைபாடு இருந்தவை, திரும்ப அனுப்பப்பட்டது. அவர்களுக்கும், புதிதாக விண்ணப்பம் வழங்குவோருக்கு இன்றே கடைசி நாள் என்பதால், இன்று (30ம் தேதி) 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Tags : nutrition organizer ,district ,
× RELATED தபால் வாக்கு செலுத்த ஏதுவாக போலீசாருக்கு சிறப்பு வாக்கு சாவடி மையம்