×

ஈரோடு அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு யோகா பயிற்சி

ஈரோடு, செப். 30: ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு யோகா பயிற்சி வழங்கப்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஈரோடு அரசு மருத்துவமனை மற்றும் பெருந்துறை, அந்தியூர், கோபி, தாளவாடி உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கட்டுள்ள சிகிச்சை மையங்களில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனாவுக்காக தனி கட்டிடம் ஒதுக்கப்பட்டு 200 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுபவர்களுக்கு யோகா மற்றும் மூச்சு பயிற்சிகள் அளிக்கப்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஈரோடு அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் ஞானக்கண் பிரேம் நவாஸ் கூறியதாவது:
ஈரோடு அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் 200 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா அறிகுறிகள் மற்றும் மூச்சு திணறல் பாதிப்பு காரணமாக 82 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பயம், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மனநல மருத்துவர் மூலம் நோயாளிகளுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்படுகிறது. மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் மூச்சு பயிற்சியும் அளிக்கப்படுகின்றன. பொதுமக்கள் தங்களுக்கு கொரோனா அறிகுறிகள் தெரியவந்தால், தாமதமின்றி உடனடியாக சிகிச்சை பெறுவது அவசியமாகும். ஒரு சிலர் பாதிப்பு கடுமையான பிறகுதான் சிகிச்சைக்கு வருகின்றனர். இதனால் நோயாளிகளுக்குதான் மிகுந்த சிரமம் ஏற்படும். இவ்வாறு ஞானக்கண் பிரேம் நவாஸ் கூறினார்.

Tags : corona patients ,Erode Government Hospital ,
× RELATED ஈரோடு அருகே 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 18 பேர் படுகாயம்