×

ஈரோடு ஜவுளி சந்தையில் மொத்த வியாபாரம் அமோகம்

ஈரோடு, செப். 30:  ஈரோடு ஜவுளி சந்தையில் தீபாவளி நெருங்குவதையடுத்து பல மாதங்களுக்கு பிறகு மொத்த வியாபாரம் இந்த வாரம் சூடுபிடித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரோடு ஜவுளி சந்தை வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடப்பது வழக்கம். கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கொரோனா பாதிப்பு காரணமாக வியாபாரம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த சில வாரங்களாக சில்லரை வியாபாரம் மட்டுமே கைகொடுத்து வந்தது. இந்நிலையில் விரைவில் தீபாவளி பண்டிகை வர உள்ளதையடுத்து சீசன் விற்பனையை ஜவுளி சந்தை வியபாரிகள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் நேற்று நடந்த ஜவுளி சந்தையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த மொத்த வியாபாரிகள் ஜவுளிகளை கொள்முதல் செய்ததால், ஜவுளி சந்தை வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இது குறித்து ஜவுளி சந்தை வியாபாரிகள் சங்க நிர்வாகி செல்வராஜ் கூறியதாவது: கொரோனா பாதிப்பிற்கு பிறகு நடந்த ஜவுளி சந்தைகளில் இந்த வாரம் தான் திருப்திகரமாக வியாபாரம் நடந்துள்ளது. மதுரை, நெல்லை, தூத்துக்குடி, தேனி என தென் மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் மொத்த வியாபாரிகள் கலந்து கொண்டு ஜவுளிகளை கொள்முதல் செய்துள்ளனர். அதேபோல சில்லரை வர்த்தகம் 50 சதவீதம் வரை நடைபெற்றுள்ளது. வெளி மாநில வியாபாரிகள் குறைவான அளவிலேயே வந்திருந்தனர். ஆனாலும் கர்நாடக வியாபாரிகள் ஓரளவு கலந்து கொண்டனர். இந்த வாரம் நடைபெற்ற ஜவுளி சந்தையில் பெட்ஷீட், ஜமக்காளம், துண்டு, குழந்தைகளுக்கான ரெடிமேடு ரகங்கள் அதிக அளவில் விற்பனையானது. குறிப்பாக பனியன், ஜட்டிகள் வழக்கத்தை விட அதிக அளவில் விற்பனையானது. கடன் தொகைக்கு பதிலாக உடனடி பணம் கொடுத்து பனியன், ஜட்டிகளை மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்துள்ளனர். இன்னும் 2 வாரங்களில் தீபாவளி சீசன் விற்பனை தொடங்கும் என எதிர்பார்க்கின்றோம். இவ்வாறு செல்வராஜ் கூறினார்.

Tags : Erode ,
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...