×

திருவண்ணாமலை மாவட்டத்தில் 19 இடங்களில் நடந்தது வேளாண் மசோதா கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை, செப்.29: மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்களை கண்டித்து, திமுக தலைமையில் அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம் 19 இடங்களில் நடந்தது. வேளாண் விளைபொருட்கள் மசோதா, விலை பொருட்களுக்கு உரிய உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்ட மசோதா ஆகிய 3 மசோதாக்களும், எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.இந்நிலையில், வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக தலைமையில் அனைத்துக் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று மாநிலம் முழுவதும் நடந்தது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில், திருவண்ணாமலை, கீழ்ெபன்னாத்தூர்.

கலசபாக்கம், செங்கம், துரிஞ்சாபுரம், தண்டராம்பட்டு, புதுப்பாளையம், போளூர், ஆரணி, களம்பூர், கண்ணமங்கலம், சேத்துப்பட்டு, பெரணமல்லூர், வந்தவாசி, தெள்ளாறு, செய்யாறு, வெம்பாக்கம், அனக்காவூர், ஜவ்வாதுமலை உள்ளிட்ட 19 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.இந்நிலையில், திருவண்ணாமலை அண்ணா சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கினார். காங்கிரஸ் வெற்றிச்செல்வம், மதிமுக டி.ராஜா, சிபிஎம் வீரபத்திரன், சிபிஐ முத்தையன், விடுதலை சிறுத்தைகள் கட்சி அம்பேத்வளவன், முஸ்லீம் லீக் நவாப்ஜான், மமக கலிமுல்லா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

அப்போது, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: நாடு முழுவதும் 85 சதவீதம் விவசாயிகள் பாதிக்கும் வேளாண் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. விவசாயிகளுக்கு விரோதமான இந்த சட்டத்தை அதிமுக அரசு ஆதரித்திருக்கிறது.இந்த சட்டங்களால், அத்தியாவசிய பொருட்கள் பதுக்கல் நடைபெறும். விலை உயரும். மத்திய அரசு வழங்க வேண்டிய ₹47 ஆயிரம் கோடி ஜிஎஸ்டி வரியை கூட பெறமுடியாத நிலையில் தமிழக அரசு இருக்கிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டால்தான், விவசாயிகளின் பிரச்னை தீரும். இவ்வாறு அவர் கூறினார்.இதில், கே.வி.மனோகரன், ஆர்.எஸ்.செல்வம், டிவிஎம் நேரு, காலேஜ் ரவி, குட்டி புகழேந்தி, ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதேபோல், கீழ்பென்னாத்தூரில் முன்னாள் அமைச்சர் கு.பிச்சாண்டி எம்எல்ஏ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கலசபாக்கத்தில் எம்பி சி.என்.அண்ணாதுரை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. செங்கத்தில் எம்எல்ஏ மு.ெப.கிரி தலைமையிலும், வந்தவாசியில் எம்எல்ஏ அம்பேத்குமார் தலைமையிலும், போளூரில் எம்எல்ஏ கே.வி.சேகரன் தலைமையிலும், ஆரணியில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தரணிவேந்தன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதேபோல், சேத்துப்பட்டில் முன்னாள் எம்எல்ஏ ஆர்.சிவானந்தம், துரிஞ்சாபுரத்தில் முன்னாள் நகராட்சித் தலைவர் இரா.தரன், செய்யாறில் முன்னாள் எம்எல்ஏ வ.அன்பழகன், தண்டராம்பட்டில் முன்னாள் எம்பி வேணுகோபால், தெள்ளாறில் கே.ஆர்.சீதாபதி ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில், காங்கிரஸ், மதிமுக, சிபிஎம், சிபிஐ, விசிக, திக, முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, ஐஜேகே, உழவர் உழைப்பாளர் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,alliance parties ,places ,district ,Thiruvannamalai ,
× RELATED கமுதியில் திமுக அலுவலகம் திறப்பு