×

மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் திமுக ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பிடிஓவை முற்றுகையிட்டு வாக்குவாதம்

தண்டராம்பட்டு, செப்.29: தண்டராம்பட்டில் அடிப்படை வசதிகள் செய்வதற்காக மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் திமுக ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பிடிஓவை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 28 ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். மேலும், ஒன்றியத்தில் இதுவரை ஒன்றியக்குழு தலைவர் தேர்ந்தெடுக்கப்படாமல் உள்ளதால், அப்பகுதி ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கு அலுவலகத்தில் அமர்வதற்கும், வளர்ச்சி பணிகளுக்கான நிதி ஒதுகப்படாமல் பணிகள் முடங்கியுள்ளது.

இதுகுறித்து, கடந்த 15 நாட்களுக்கு முன்பு பிடிஓ கோவிந்தராஜூலுவிடம் ஒன்றிய அலுவலகத்தில் தங்களுக்கு தனி அறைகள் ஒதுக்கி இருக்கைகள் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று மனு அளித்தனர். மனு அளித்தும் இதுநாள் வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால், நேற்று 16 திமுக ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பிடிஓ அலுவலகத்தில் பிடிஓ கோவிந்தராஜூலுவை திடீரென முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது: ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கவுன்சிலர்கள் அமர்வதற்கு ஒரு அரை வேண்டும் என்றும், வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்கவேண்டும் எனவும் மனு அளித்து 15 நாட்களுக்கு மேல் ஆகிறது. ஆனால், இதுவரை அதற்குண்டான நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் அமர்வதற்கு இடம் ஒதுக்க வேண்டும்.

மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை வசதி போன்ற தேவைகளை நிறைவேற்ற நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேலும், பொதுமக்களுக்கு தேவையான பணிகள் குறித்தும் மனு அளித்து இருக்கிறோம். ஆனால், இதுவரை நீங்கள் பணிகள் எதுவும் ஒதுக்கித்தரவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர். அதற்கு பிடிஓ கோவிந்தராஜூலு, நீங்கள் கொடுத்த மனுக்களை மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி உள்ளோம். மேலும், ஒன்றியக்குழு நிதியில் இருந்த பணம் அலுவலக நிர்வகிப்பதற்காக பயன்படுத்தி வருகிறோம். ஆகையால், உங்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்தால் உடனடியாக பணிகள் செய்வதற்கு நிதி வழங்கப்படும் என்றார்.

Tags : DMK ,union committee members ,PDO ,
× RELATED பூண்டி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் 9...