×

மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் உதவித்தொகை கோரி குவிந்த மனுக்கள் வெளியே அமர்ந்து கலெக்டர் பெற்றார்

திருவண்ணாமலை, செப்.29: திருவண்ணாமலை மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் உதவித்தொகை கோரி ஏராளமான மனுக்கள் குவிந்தன. அலுவலகத்துக்கு வெளியே அமர்ந்து கலெக்டர் மனுக்களை பெற்றுக்கொண்டார். திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையிலும், தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் மக்களின் வருகை அதிகரித்து வருகிறது. அதன்படி, நேற்றும் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோரிக்கை மனுக்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் திரண்டு, நீண்ட வரிசையில் காத்திருந்து மனுக்களை அளித்தனர். இ-சேவை மையங்கள் மூலம் ஆன்லைனில் மனுக்கள் அனுப்பவும், செல்போனில் கோரிக்கைகளை தெரிவிக்கவும் பலமுறை கலெக்டர் வலியுறுத்தியும், நேரில் மனுக்கள் அளிப்பதையே நம்பிக்கைக்கு உரியதாக மக்கள் கருதுகின்றனர்.

இந்நிலையில், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால், அலுவலக கூட்ட அரங்கத்தில் மனுக்கள் பெறவில்லை. எனவே, அலுவலகத்துக்கு வெளியே திறந்தவெளி பகுதியில் அமர்ந்து. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை கலெக்டர் ேக.எஸ்.கந்தசாமி பெற்றுக்கொண்டார்.இதில் முதியோர் உதவித்தொகை, ஆதரவற்றோர் மற்றும் விதவை உதவித்தொகை போன்றவற்றை கேட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் மனுக்களை அளித்தனர்.நேரடி விசாரணைக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அனுப்பப்படும், தகுதியுள்ள நபர்களுக்கு உதவித்தொகை கிடைக்கும் என கலெக்டர் தெரிவித்தார்.

அதேபோல், கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், அடையாள அட்டையை புதுப்பிக்க நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் குவிந்தனர். மேலும், குறைதீர்வு கூட்டத்திலும், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திலும் சமூக இடைவெளியின்றி கூட்ட நெரிசல் காணப்பட்டதால் அச்சம் ஏற்பட்டது. அடையாள அட்டையை புதுப்பிக்க அவகாசம் இருக்கிறது, புதுப்பிக்க தவறினாலும் உதவிகள் ெதாடர்ந்து கிடைக்கும், கொரோனா பரவல் இருப்பதால் நேரில் வருவதை தவிர்க்க வேண்டும் என அங்கிருந்த அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

Tags : collector ,
× RELATED காவல்துறை சார்பில் குறைதீர் கூட்டம்;...