×

ஊராட்சி தலைவர்கள் இணைந்து புதியம்புத்தூர் மலர் குளம் மழைநீர் கால்வாய் தூர்வாரும் பணி நிறைவு

ஓட்டப்பிடாரம், செப்.29: புதியம்புத்தூர் மலர் குளத்திற்கு மழைநீர் வரத்து கால்வாயை அரசு தூர்வாரப்படாத நிலையில் ரூ.3 லட்சம் செலவில் ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்பு சார்பில் சம்பந்தப்பட்ட ஓடையை தூர்வாரியுள்ளனர்.  ஓட்டப்பிடாரம் ஒன்றியத்திற்குட்பட்ட புதியம்புத்தூர் மலர் குளமானது அப்பகுதியைச் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. பிரதானமாக கருதப்படும் இந்த குளத்துக்கு வரும் மழை நீர் கால்வாய்கள் அனைத்தும் தனியார் காற்றாலை நிறுவனத்தினரால் தடைகள் ஏற்படுத்தப்பட்டதால்  அவைகள் தூர்ந்து காணப்படுகின்றன. இதனால் குளமானது சில ஆண்டுகளாக நிரம்பாத நிலையில் மக்களின் குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.

 இந்நிலையில், ஜம்மபுலிங்கபுரம் முதல் செட்டூரணி வரையிலான ஓடையை தூர்வாரும் பணியானது சுமார் 3 கிலோமீட்டர் தொலைவிற்கு ரூ.3 லட்சம் செலவில் ஓட்டப்பிடாரம் ஒன்றிய ஊராட்சி மன்ற கூட்டமைப்பு தலைவர்கள் தங்களுடைய சொந்தச்செலவில் தூர்வாரும் பணிகளை வருவாய்த்துறை, காவல் துறை ஒப்புதலுடன் ஜேசிபி மூலம் மேற்கொண்டனர். கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நடந்த இப்பணிகளானது தற்போது முடிவடைந்தது.  புதியம்புத்தூர், ஜம்புலிங்கபுரம், ஓட்டப்பிடாரம், குலசேகரநல்லூர், ராஜாவின் கோவில், எஸ்.கைலாசபுரம், அகிலாண்டபுரம், பாஞ்சாலங்குறிச்சி, சாமிநத்தம், சில்லாநத்தம், தெற்கு வீரபாண்டியபுரம், வாலசமுத்திரம் ஆகிய ஊராட்சி மன்றத் தலைவர்கள்,

ஓட்டப்பிடாரம் மற்றும் புதியம்புத்தூர் அனைத்து வியாபார சங்க நிர்வாகிகள், புதியம்புத்தூர் ரெடிமேட் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், சுற்றுவட்டார அனைத்து விவசாய சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் பங்களிப்புடன் இப்பணிகளானது நடந்தது. நிகழ்ச்சியின் முடிவில் கூட்டமைப்பு நிர்வாகிகளான வேலாயுதசாமி, இளையராஜா, குழந்தைவேலு உள்ளிட்ட இணைந்து பணியாற்றிய அனைவரும் பாராட்டப்பட்டு கவுரவிக்கப்பட்டனர். மேலும் அவர்களின் செயலை பொதுமக்கள் மற்றும் விவசாயிகளும் பாராட்டினர்.

Tags : Panchayat leaders ,flower pond rainwater canal ,
× RELATED சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தை 250-க்கும்...