×

பசுமாட்டை பிடித்து வர சென்றபோது சோகம் மின்னல் தாக்கி அக்கா, தம்பி பலி பண்ருட்டி அருகே பரிதாபம்

பண்ருட்டி, செப். 29: பண்ருட்டி அருகே மின்னல் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த அக்கா, சகோதரன் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.   கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மணப்பாக்கத்தை சேர்ந்தவர் சண்முகம்(40), பிளாஸ்டிக் குடம் விற்பனை செய்து வருகிறார். இவரது மனைவி ருக்கு(35). இவர்களுக்கு நிஷா(11) கவியரசன்(10), தீனா(8) என்ற மூன்று குழந்தைகள் உள்ளனர். நிஷா புதுப்பேட்டை அரசு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தாள். கவியரசன் தான் வசித்து வரும் பகுதியில் 6ம் வகுப்பு படித்து வந்தான். இவரது வீட்டில் பசுமாடு ஒன்று உள்ளது. நேற்று மாலை மேகங்கள் இருண்டு பலத்த இடி மின்னலுடன் மழை பெய்தது. இவர்களது பசுமாடு மேய்ச்சலுக்கு சென்றதால் திரும்ப வராமல் இருந்தது. அந்த நேரத்தில் மழை பெய்ததால் பசுமாட்டை அழைத்து வருமாறு தாயார் ருக்கு கூறியதாக தெரிகிறது. இதையடுத்து, அக்காவான நிஷா தனது தம்பி கவியரசனை அழைத்துகொண்டு பசு மேய்ந்த நிலத்திற்கு சென்றனர்.  

 அங்கிருந்த மாட்டை பிடித்துக்கொண்டு இருவரும் வீடு திரும்பினர். அப்போது, பயங்கர சத்தத்துடன் இடி, மின்னல் அடித்தது. அப்போது, மின்னல் தாக்கியதில் நிஷா, கவியரசன் ஆகிய இருவரும் சுருண்டு விழுந்து மயங்கினர். மாட்டை தேடி சென்ற குழந்தைகள் திரும்ப வர நேரமானதால் தாயும் வெளியே சென்று வந்த சண்முகமும் சேர்ந்து குழந்தைகளை தேடி சென்றனர். அப்போது இருவரும் மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்த ஊர் மக்கள் ஓடி வந்து குழந்தைகளை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.   மருத்துவர்கள் இருவரையும் பரிசோதனை செய்தபோது ஏற்கனவே இரண்டு குழந்தைகளும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனை கேட்ட தாய், தந்தை இருவரும் கதறி அழுதனர்.

தகவலறிந்த புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் ரேவதி மற்றும் போலீசார் இறந்த இருவரின் சடலங்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.    தாசில்தார் உதயகுமார் இரு குழந்தைகளின் மரணம் குறித்து மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அனுப்பினார். மின்னல் தாக்கியதில் இரு குழந்தைகள் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Tags : brother ,sister ,
× RELATED அடிச்சாலும், புடிச்சாலும் நீயும்,...