×

எரிவாயு குழாய் அமைக்க எதிர்ப்பு அதிகாரியுடன் விவசாயிகள் வாக்குவாதம் ராமநத்தம் அருகே பரபரப்பு

திட்டக்குடி, செப். 29: ராமநத்தம் அருகே அரங்கூர் கிராமத்தில் புதிதாக எரிவாயு குழாய் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் அதிகாரியுடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்துள்ள பெரங்கியம் கிராமத்தின் வழியாக மதுரையிலிருந்து சென்னை நோக்கி புதிய எரிவாயு குழாய் விளை நிலத்தில் பதிக்கும் பணி நடந்து வருகிறது. ஏற்கனவே 2004ம் ஆண்டு விளைநிலத்தில் குழாய் பதிக்கப்பட்டு குழாயின் மூலம் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் பொருட்கள் செல்கிறது. அதன் மீது விவசாயிகள் சோளம், பருத்தி உள்ளிட்ட பயிர்களை பயிர் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது அதனருகே புதிதாக எரிவாயு குழாய் பதிக்கும் பணிக்கு அறிவிப்பு கொடுத்த நிலையில் கடந்த 4 மாதமாக எந்த பணியும் நடைபெறவில்லை.

இந்நிலையில் விவசாயிகள் அந்த விளைநிலங்களில் சோளம் பயிர் செய்தனர். திடீரென நேற்று முன்தினம் எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் குழாய் பதிக்க துவங்கியது. மண் வெட்டும் இயந்திரம் மூலம் பயிர்களை சேதப்படுத்தினர். இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து அந்த பணியை தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து நேற்று அரங்கூர் கிராமத்தில் விவசாயிகளுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் திருச்சி கோட்ட உதவி மேலாளர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். அப்போது அதிகாரிக்கும் விவசாயிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. விவசாயிகளின் கோரிக்கையை உயர் அதிகாரிகளுடன் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை எந்த பணியும் நடைபெறாது எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை ஏற்று விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags : opposition official ,Ramanathapuram ,
× RELATED நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற...