×

மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்களை கண்டித்து குமரியில் திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், செப்.29: மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்களை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் குமரி மாவட்டத்தில் 47 இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்களை கண்டித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் குமரி கிழக்கு மாவட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் நாகர்கோவிலில் உள்ள குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கிழக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ தலைமை வகித்தார். காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் செல்லசுவாமி, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து, மதிமுக மாவட்ட செயலாளர் வெற்றிவேல், விடுதலை சிறுத்தை நிர்வாகி திருமாவேந்தன், திராவிடர் கழக மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் மற்றும் கூட்டணி கட்சியினர் முன்னிலை வகித்தனர். திமுக சார்பில் நாகர்கோவில் மாநகர திமுக செயலாளர் வக்கீல் மகேஷ், மாநில மீனவர் அணி செயலாளர் பெர்னார்டு, முன்னாள் எம்.பி ஹெலன்டேவிட்சன், தில்லைசெல்வம், காங்கிரஸ் சார்பில் கிழக்கு மாவட்ட பொருளாளர் பாபு ஆன்றனி, மாவட்ட துணை தலைவர் மகேஷ்லாசர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களை பாதிக்கும் மத்திய பா.ஜ அரசு நிறைவேற்றியுள்ள மூன்று சட்ட மசோதாக்களை திரும்ப பெற வலியுறுத்தியும், அதற்கு துணைபோகும் ஆளும் அதிமுக அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஏர் கலப்பை உள்ளிட்ட வேளாண் கருவிகளை எடுத்து வந்திருந்தனர். அதற்கு அனுமதியில்லை என்று போலீசார் கூறியதால் ஆர்ப்பாட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவற்றை ஆர்ப்பாட்டம் நடைபெறும் பகுதியில் தரையில் வைத்திருக்க அனுமதிக்கப்பட்டது. குமரி மாவட்டம் முழுவதும் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் மொத்தம் 47 இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.

தக்கலை: தக்கலை தலைமை தபால்  நிலையம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு நகர திமுக செயலாளர் மணி தலைமை  வகித்தார். முன்னாள் எம்பி பெல்லார்மின் தொடங்கி வைத்தார். இதில் திமுக  ஒன்றிய துணை செயலாளர் ஜுட்சேம், பொறியாளர் அணி வர்க்கீஸ், வழக்கறிஞர்  அணிதுணை அமைப்பாளர் முத்துகுமரேஷ், காங்கிரஸ் நகர தலைவர் ஹனுகுமார், மாவட்ட  நிர்வாகிகள் ஜோண்ஸ் இம்மானுவேல், ஷாகுல் அமீது, உள்ளிட்டவர்கள் கலந்து  கொண்டனர். மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மனோதங்கராஜ் எம்எல்ஏ. முடித்து  வைத்து பேசினார்.
சுசீந்திரம்: அகஸ்தீஸ்வரம் வடக்கு  ஒன்றியம், தேரூர் பேரூர் திமுக மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் தேரூர்  ஜங்ஷனில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய கழக செயலாளர் மதியழகன், பேரூர்  செயலாளர் முத்து ஆகியோர் தலைமை வகித்தனர். காங்கிரஸ் வட்டாரத் தலைவர்  காலபெருமாள், விடுதலை சிறுத்தை கட்சி தாஸ், சதீஷ், மற்றும் ஒன்றிய துணைச்  செயலாளர் ஐயப்பன் மற்றும், ஆறுமுகம், பாபு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மதன்,  துணை அமைப்பாளர்கள் முரளி, விஷாக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  ஆர்ப்பாட்டத்தை ஆஸ்டின் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். இதில் திமுக மற்றும்  கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

விவசாயிகள் எதிர்காலம் கேள்விக்குறி  தக்கலை தலைமை தபால் நிலையம் முன் நடைபெற்ற போராட்டத்தில் மனோதங்கராஜ் எம்எல்ஏ பேசியதாவது: மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களின் அரசாக செயல்பட்டு வருகிறது. 3 வேளாண்மை மசோதாக்களின் மூலமாக விவாசாயிகளின் எதிர்காலத்தையும், வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கி உள்ளது. மாநில அரசுகளின் உரிமையை பறித்துள்ளது. கல்வி உரிமையை பறிக்கிறது. ஒவ்வொன்றாக பறிக்கும் மத்திய அரசு தமிழகத்துக்கு கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்கவில்லை. மக்கள் விரோத அரசுகளாக செயல்படும் மத்திய, மாநில அரசுகளை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

ஆறு மாதத்தில் இந்த ஆட்சியை மக்கள் வீழ்த்துவார்கள் நாகர்கோவிலில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ பேசியதாவது: மத்திய அரசு ரயில்களை தனியார் மயமாக்கியுள்ளது. விமான நிலையங்களை தனியார் மயமாக்கியுள்ளது. இந்தநிலையில் தற்போது சாதாரண விவசாயிகளையும் கார்ப்பரேட்களிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளியுள்ளனர். விவசாயிகளை பாதிக்கும் மூன்று சட்டங்களை இயற்றியுள்ளனர். இதற்கு எடப்பாடி அரசு ஆதரவு அளித்துள்ளது. விவசாயிகளை பாதிக்கும் இந்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்டாலும் போராட்டம் தொடரும். தமிழகத்தில் அடுத்த 6 மாதத்தில் பொதுத்தேர்தல் வர உள்ளது. அப்போது மக்கள் இந்த ஆட்சியை வீழ்த்துவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : DMK ,alliance parties ,government ,Kumari ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...