×

தெரு நாய்களுக்கு மட்டும் பரவும் என நினைப்பது தவறு வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கும் ரேபிஸ் தடுப்பூசி கட்டாயம்

நாகர்கோவில், செப்.27: வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கும், வருடத்துக்கு ஒருமுறை ரேபிஸ் தடுப்பூசி கட்டாயம் போட்டுக் கொள்ள வேண்டும் என கால்நடை டாக்டர்கள் கூறினர். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 28ம் தேதி, உலக ரேபிஸ் (வெறி நாய்க்கடி தடுப்பு நாள்) தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி நேற்று (28ம்தேதி) மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில், நாய்களுக்கு இலவச ரேபிஸ் தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்றது. கால்நடை பராமரிப்பு துறையினரால் நாகர்கோவில் கால்நடை பெரு மருத்துவமனை, குழித்துறை கால்நடை மருத்துவமனை, எறும்புக்காடு கால்நடை மருந்தகம் ஆகிய இடங்களில் முகாம்கள் நடைபெற்றன. நாகர்கோவில் மாநகராட்சி மற்றும் ஜீவ காருண்யம் அறக்கட்டளை இணைந்து நாகர்கோவில் இந்து கல்லூரி அருகே உள்ள மாநகராட்சி ைமதானத்தில் சிறப்பு முகாமை நடத்தினர். இந்த முகாமை மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் தொடங்கி வைத்தார்.

மாநகர நகர் நல அலுவலர் டாக்டர் கிங்சால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கால்நடைகள் டாக்டர் (ஓய்வு) கமலேஷ், நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணியை மேற்கொண்டார். முன்னதாக அவர் கூறுகையில், நாய்கள் மூலம் பரவும் ரேபிஸ் வைரஸ் மிக கொடியதாகும். நாய்களிடம் இருந்து இந்த நோய் மனிதனை எளிதில் தாக்கும். ரேபிஸ் தாக்கிய நாயை கையால் தொடும் போது, கையில் ஏதாவது லேசான கீறல்கள், புண் இருந்தாலும் அதில் ரேபிஸ் புகுந்து விடும். ரேபிஸ் தாக்கிய நாய்க்கு, அதிகளவில் உமிழ்நீர் வெளியேறும். ஒரு இடத்தில் நிற்காது. எதையாவது கடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருக்கும். சிலர் வீடுகளில் வளர்க்கும் நாய்களுக்கு ரேபிஸ் வராது என நினைக்கிறார்கள். பெருஞ்சாளிகள் மூலம் ரேபிஸ் கிருமிகள் நாய்களுக்கு பரவும். வீடுகளில் வளர்க்கும் நாய்கள் இரவு நேரங்களில் பெருச்சாளிகளை கடித்து, அதற்கு ரேபிஸ் இருந்தால், நாய்க்கும் பரவும். எனவே வீடுகளில் உள்ள நாய்களுக்கும் வருடத்துக்கு ஒருமுறை ரேபிஸ் கட்டாயம் போட்டுக் கொள்ள வேண்டும் என்றார்.

Tags :
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...