மகசூல் குறைந்ததால் தேங்காய் விலை கிடு, கிடு

உடுமலை, செப்.29: தென்னையில் மகசூல் குறைந்ததால் தேங்காய் விலை கிலோவுக்கு ரூ.10 உயர்ந்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம் தாலுகாக்களில் ஏறத்தாழ ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. இதுதவிர பொள்ளாச்சி, ஆனைமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் 2 லட்சம் ஏக்கரில் விவசாயிகள் தென்னை சாகுபடி செய்துள்ளனர். உடுமலை மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து மதுரை, ஒட்டன்சத்திரம், சென்னை கோயம்பேடு, திருச்சி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தேங்காய் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. டெல்லி, ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களுக்கும் இங்கிருந்து தேங்காய்கள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.கடந்த ஆண்டு கோவை திருப்பூர் மாவட்டங்களில் வெள்ளை ஈக்களின் தாக்குதல் அதிகரித்ததால் தற்போது தென்னைகளில் மகசூலும், தேங்காயின் அளவும், எடையும் குறைந்துள்ளது. ஆயிரம் தேங்காய்கள் கிடைக்கின்ற தோப்பு ஒன்றில் தற்சமயம் 300 முதல் 400 தேங்காய்களே கிடைக்கின்றன.

இதனால் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஒரு டன் தேங்காய் 28 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. இந்த மாதம் சந்தைகளில் ஒரு டன் தேங்காய் ரூ. 38 ஆயிரம் முதல் ரூ.42 ஆயிரம் வரை விற்பனையாகிறது. வரும் நாட்களில் நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகைகள் வர உள்ளதால் வட மாநிலங்களில் தேங்காய் தேவை அதிகரித்து உள்ளது. மகசூல் குறைந்ததால் வெளிமாநிலங்களுக்கு போதுமான அளவிற்கு ஏற்றுமதி செய்ய முடியாத நிலையில் உள்ளூர் சந்தைகளில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. தேங்காய் மட்டுமன்றி கொப்பரையில் விலையும் ரூ.100 லிருந்து ரூ.120 ஆக உயர்ந்துள்ளது. விலையேற்றம் குறித்து விவசாயி ஒருவர் கூறும்போது, ‘‘ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் நெருங்குவதாலும், தேங்காய்களின் வரத்து குறைந்துள்ளதால் தற்போது கிலோ ரூ.40க்கு விற்பனையாகி வரும் தேங்காய் கிலோவுக்கு ரூ.10 அதிகரித்து 50 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. அதேபோல் கொப்பரை ஒரு கிலோ ரூ.140 வரை விற்பனையாக வாய்ப்புள்ளது’’ என்றார்.

Related Stories: