×

மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை கண்டித்து மத்திய மாவட்ட திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் ராஜேந்திரன் எம்எல்ஏ பங்கேற்பு

சேலம், செப்.29:மத்திய அரசின் வேளாண் சட்ட மசோதாக்களை கண்டித்து, சேலம் மத்திய மாவட்ட திமுக தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், அனைத்து கட்சியினர் பங்கேற்றனர். மத்திய அரசின் 3 வேளாண் திருத்த சட்ட மசோதாக்களை கண்டித்து, தமிழகம் முழுவதும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சேலம் மத்திய மாவட்டத்தில் 20 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சேலம் கலைஞர் மாளிகை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மத்திய மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்எல்ஏ தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை கொண்டு வந்த மத்திய அரசை கண்டித்தும், அதற்கு ஆதரவு அளித்த அதிமுக அரசை கண்டித்தும், உடனடியாக சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் எம்பி பார்த்திபன், மத்திய மாவட்ட அவைத்தலைவர் கலையமுதன், பொருளாளர் சுபாஷ், மாநகர செயலாளர் ஜெயக்குமார், வக்கீல் அண்ணாமலை, காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் ஜெயபிரகாஷ், சிபிஐ மாவட்ட செயலாளர் மோகன், சிபிஎம் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, விசிக ஜெயசந்திரன், மதிமுக ஆனந்தராஜ், திக இளவழகன், முஸ்லிம் லீக் அன்சர் பாஷா, கொமதேக லோகநாதன், தங்கவேலு, மமக சையத் முஸ்தபா, வாழ்வுரிமை கட்சி மோகன்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ கூறுகையில், “விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சட்டத் திருத்தத்தை சர்வாதிகார போக்குடன் நிறைவேற்றியுள்ள மத்திய அரசு மற்றும் அதனை துணைபோன அடிமை அதிமுக அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்,” என்றார். இதேபோல், மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட ஓமலூர், மெய்யனூர், சூரமங்கலம், அஸ்தம்பட்டி, வின்சென்ட், கொண்டலாம்பட்டி, தாதகாப்பட்டி, குகை உள்ளிட்ட 20 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Tags : Rajendran MLA ,demonstration ,Central District ,DMK ,Central Government ,
× RELATED கனிமொழி காரில் 2வது நாளாக சோதனை