×

கிருஷ்ணகிரி மாவட்டம், சென்னசந்திரம் அடுத்த நெடுஞ்சாலை கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார்


கிருஷ்ணகிரி, செப்.29: கிருஷ்ணகிரி மாவட்டம், சென்னசந்திரம் அடுத்த நெடுஞ்சாலை கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார். ஓசூரில் உள்ள தனியார் வர்த்தக நிறுவனத்தில் 3 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். இந்த நிறுவனத்தில் திப்பம்பட்டியைச் சேர்ந்த சாமிநாதன் மற்றும் பூசாரிபட்டியைச் சேர்ந்த சீனிவாசன் ஆகியோரை, வினோத்குமார் உறுப்பினர்களாக சேர்த்துள்ளார். இதனிடையே, அந்த வர்த்தக நிறுவனத்தை மூடி விட்டு, அதனை நடத்தி வந்தவர்கள் தலைமறைவாகி விட்டனர். நிறுவனம் மூடப்பட்டதால் தங்களுக்கு ஏற்பட்ட இழப்பை, வினோத்குமார் தான் வழங்கவேண்டுமென சாமிநாதனும், சீனிவாசனும் தகராறு செய்து வந்துள்ளனர். இது குறித்து வினோத்குமார் அளித்த புகாரின் பேரில், குருபரப்பள்ளி போலீசார், இரு தரப்பினருக்கும் இடையே சமாதான உடன்படிக்கை செய்து வைத்தனர். இருப்பினும் சீனிவாசன் மற்றும் சாமிநாதன், தொடர்ந்து வினோத்குமாரிடம் தகராறு செய்து வந்ததுடன், அடியாட்களை வைத்தும் மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று வினோத்குமார் வீட்டில் யாரும் இல்லாத சமயம், அவரது வீட்டின் பூட்டை உடைத்த இருவரும், ₹1 லட்சம் ரொக்கம், 10 சவரன் நகைகளை எடுத்து கொண்டும், 2 கறவை மாடுகளை ஓட்டிக் கொண்டும் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த வினோத்குமார், தனது பெற்றோர் முருகேசன்-எல்லம்மாள் மற்றும் சகோதரருடன், கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று காலை வந்தார். அப்போது, 4 பேர் உடலிலும் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு திடீரென தீக்குளிக்க முயன்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உடனடியாக அவர்களை தடுத்து நிறுத்தி, உடல் மீது தண்ணீர் ஊற்றி அவர்களை காப்பாற்றினர். தொடர்ந்து இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Vinodkumar ,highway village ,Chennachandram ,Krishnagiri district ,
× RELATED கிருஷ்ணகிரியில் தீப்பற்றி எரிந்த கார்