×

சத்துணவு அமைப்பாளர் பணிக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம் அக்.7ம் தேதி கடைசி நாள்

திண்டுக்கல், செப்.29: திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விஜயலெட்சுமி வெளியிட்ட அறிவிப்பு: திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி சத்துணவு மையங்களில் ஏற்பட்டுள்ள சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படவுள்ளன. இப்பணியிடங்களுக்கு பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சத்துணவு அமைப்பாளர் பதவிக்கு காலியிடம்-338, ஊதியம் ரூ.7700-24200, சமையல் உதவியாளர் பதவிக்கு காலியிடம்- 157, ஊதியம் ரூ.3000-9000. சத்துணவு அமைப்பாளர் பதவிக்கு கல்வித்தகுதி: பொதுப்பிரிவு, தாழ்த்தப்பட்டவர்களாக இருப்பின் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பழங்குடியினராக இருப்பின் 8ம் வகுப்பு தேர்ச்சி, தோல்வி  பெற்றிருக்க வேண்டும். சமையல் உதவியாளர் பதவிக்கு கல்வித்தகுதி: பொதுப்பிரிவு, தாழ்த்தப்பட்டவர்களாக இருப்பின் 5ம் வகுப்பு தேர்ச்சி, தோல்வி பெற்றிருக்க வேண்டும். பழங்குடியினராக இருப்பின் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு (அமைப்பாளர், சமையல் உதவியாளர்): பொதுப்பிரிவு, தாழ்த்தப்பட்டவர்கள் 21 வயது பூர்த்தியடைந்தும் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். பழங்குடியினராக இருப்பின் 18 வயது பூர்த்தியடைந்தும் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். விதவை, கணவரால் கைவிடப்பட்டோராக இருப்பின் 20 வயது பூர்த்தியடைந்தும் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். காலியாக உள்ள பணியிடங்கள் அரசு ஆணைகளின்படி நிரப்பப்படும். கல்வித்தகுதி, இருப்பிடம், சாதி, விதவை, கணவரால் கைவிடப்பட்டோர் மற்றும் இதர முன்னுரிமை முதலியவற்றுக்கான ஆதார சான்று நகல் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும். விண்ணப்பிக்கும் இடத்திற்கும், விண்ணப்பதாரர் குடியிருப்பிற்கும் இடையே 3 கிலோ மீட்டர் தூரத்திற்குள் இருக்க வேண்டும்.

காலிப்பணியிட விவரங்களும், இனசுழற்சி விவரங்களும் மற்றும் விண்ணப்ப படிவமும் www.dindigul.tn.nic.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சி ஆணையாளர்களுக்கு வருகிற அக்.7ம் தேதி அலுவலக வேலை நேரத்திற்குள் கிடைக்கப்பெறும்  வகையில் அனுப்பிட வேண்டும். இதற்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. ஏற்கனவே, 2017ம் ஆண்டு 231 சத்துணவு அமைப்பாளர் பணியிடங்களை நிரப்ப வெளியிடப்பட்ட 29.06.2017 தேதி குறிப்பிடப்பட்ட அறிவிப்பாணை ரத்து செய்யப்பட்டுவிட்டது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags : nutrition organizer ,
× RELATED துவரம் பருப்பு கடத்தப்பட்ட வழக்கில்...