×

செங்கம் அருகே விவசாயி கொலை வழக்கில் மருமகன் கைது அடிக்கடி திட்டியதால் கொன்றதாக வாக்குமூலம்

செங்கம், செப்.26:செங்கம் அருகே விவசாயி கொலை வழக்கில் மருமகனை போலீசார் கைது செய்தனர். அடிக்கடி திட்டியதால் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த மேல்புழுதியூர் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன்(51), விவசாயி. இவர் கடந்த 23ம் தேதி இரவு 9 மணியளவில் அருகே உள்ள தங்களது விவசாய நிலத்திற்கு சென்றார். மறுநாள் அவர் தலை மற்றும் உடலின் பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரியவந்தது.
இதுகுறித்து செங்கம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செங்குட்டுவன் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

இதற்கிடையில் அதே பகுதியைச் சேர்ந்த நடராஜனின் மருமகனான விவசாயி விக்னேஷ்(25) என்கிற ஜெயச்சந்திரனை நேற்று போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், நடராஜனை கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து விக்னேஷ் கொடுத்துள்ள வாக்குமூலம் கூறியதாக போலீசார் கூறியதாவது:கொலையான நடராஜன் தனது மகளை விக்னேசுக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். திருமணம் ஆன நாளில் இருந்து விக்னேஷ் சரிவர வேலைக்கு செல்வதில்லையாம். இதனால் மாமனார் நடராஜன் எனது மகளை ‘உனக்கு திருமணம் செய்து வைத்தே தவறு. நீ எனது மகளை சரியாக பார்த்து கொள்வது இல்லை. வேலைக்குசெல்வதில்லை’ என திட்டுவாராம். இதனால் விக்னேசுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவத்தன்று இருவரும் ஒன்றாக சேர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது விக்னேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாமனார் நடராஜனை சரமாரியாக வெட்டியுள்ளார். பின்னர் நிலத்தில் உள்ள பம்ப்செட் பகுதிக்கு சென்று கை, கால்களை கழுவி கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார். மறுநாள் மாமனார் கொலை செய்யப்பட்டுள்ளதாக உறவினர் ஒருவர் போன் மூலம் தெரிவித்துள்ளார். ஒன்றுமே தெரியாதது போல சம்பவ இடத்துக்கு சென்றுள்ளார். இருப்பினும் தான் கொலை செய்ததை போலீசார் கண்டுபிடித்துவிட்டனர்.இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags : Son-in-law ,Chengam ,murder ,
× RELATED பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ்...