×

அண்ணாமலையார் கோயிலில் 28ம்தேதி பந்தக்கால் முகூர்த்தம் பக்தர்களுக்கு அனுமதியில்லை கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு

திருவண்ணாமலை, செப்.26: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கார்த்திகை தீபத்திருவிழா பந்தக்கால் முகூர்த்தம் வரும் 28ம் தேதி நடக்கிறது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக பக்தர்களுக்கு அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை தீபத்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த விழா தொடர்ந்து 10 நாட்கள் நடக்கும். அப்போது காலை மற்றும் இரவில் சுவாமிகள் வீதி உலா நடைபெறும். இதில் முக்கியமாக பஞ்ச ரத தேரோட்டம் நடக்கும். அன்று ஒரே நாளில் காலை முதல் இரவு வரை 5 தேர்கள் வீதி உலா நடைபெறும். இதில் அம்மன் தேரை பெண்களே இழுப்பது வழக்கம். இதையடுத்து 10ம்நாள் 2668 அடி உயர மலையில் மகா தீபம் ஏற்றப்படும். அன்று அதிகாலை கோயிலில் பரணி தீபம் ஏற்றப்படும். இந்த விழாவில், சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம்.

அதன்படி, இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழா, வரும் நவம்பர் 20ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. 29ம்தேதி மகாதீபப் பெருவிழா நடைபெறும். ஆனால், கொரோனா பரவல் அச்சம் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக, இந்த ஆண்டு தீபத்திருவிழாவுக்கு என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்படும், விழாவை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது.இந்நிலையில், கார்த்திகை தீபத்திருவிழாவின் பூர்வாங்க பணிகளின் தொடக்கமாக நடைபெறும் பந்தக்கால் முகூர்த்தம், வரும் 28ம்ததி அதிகாலை 5.30 மணி முதல் 7 மணிக்குள் நடைபெறும். ஆனால், பந்தக்கால் முகூர்த்த விழாவில், பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதியில்லை எனவும், குறைந்த எண்ணிக்கையிலான கோயில் ஊழியர்கள், அர்ச்சகர்கள், முறைதாரர்கள் மட்டுமே பங்கேற்பார்கள் எனவும் கோயில் இணை ஆணையர் ஞானசேகர் தெரிவித்துள்ளார்.மேலும், இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழாவும், மாவட்ட நிர்வாகம் விதிக்கும் கட்டுப்பாடுகளின்படியே நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Devotees ,Bandhakal Mukurtham ,Karthika Fire Festival ,Annamalaiyar Temple ,
× RELATED ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி...