×

ராமநதி-ஜம்புநதி இணைப்பு திட்டத்தில் நாராயணப்பேரி கால்வாய் சீரமைப்பு பணி செல்வமோகன்தாஸ்பாண்டியன் எம்எல்ஏ ஆய்வு

பாவூர்சத்திரம், செப்.26:ராமநதி-ஜம்புநதி இணைப்பு கால்வாய் திட்டத்தில் உபரிநீர் கொண்டு வரப்படும் நாராயணப்பேரி கால்வாய் சீரமைப்பு பணிகளை செல்வமோகன்தாஸ்பாண்டியன் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கீழப்பாவூர் பகுதி மக்களின் 48 ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றும் வண்ணம், செல்வமோகன்தாஸ்பாண்டியன் எம்எல்ஏவின் தொடர் கோரிக்கையை ஏற்று, ராமநதி-ஜம்புநதி இணைப்பு கால்வாய் திட்டப்பணிக்கு ரூ.41.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி இத்திட்டத்தை நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார்.தற்போது பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. ஆவுடையானூர் பத்மநாதபேரிகுளத்தில் இருந்து புங்கன்குளத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் வகையில் ஆவுடையானூரில் புதிய இணைப்பு கால்வாய் தோண்டும் பணி தொடங்கி நடந்து வருகிறது.இத்திட்டத்தில் உபரிநீரை கொண்டு வரும் நாராயணப்பேரி கால்வாய் ஆழப்படுத்துதல், அகலப்படுத்துதல், கரைகள் பலப்படுத்துல் போன்ற பணிகள் நடைபெறுகின்றன. இதனை செல்வமோகன்தாஸ்பாண்டியன் எம்எல்ஏ பார்வையிட்டார்.

தொங்கு பாலம், திரவியநகர் தென்புறம், நாட்டார்பட்டி ரயில்வே கேட் கீழ்புறம் நடைபெறும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறுகையில், முதல்வர், துணை முதல்வர் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் ராமநதி-ஜம்புநதி இணைப்பு கால்வாய் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. இத்திட்டத்தின் மூலம் உபரிநீரை கைக்கொண்டார்குளம், கொண்டலூர்குளம், திப்பணம்பட்டிகுளத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் வகையில், நாராயணப்பேரி கால்வாய் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. 40 ஆண்டுக்கு முன் எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட இக்கால்வாய் சீரமைக்கப்பட்டு வருகிறது. பணிகளை விரைந்து முடித்து இப்பகுதி விவசாய தேவைகளுக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.அவருடன், முன்னாள் யூனியன் சேர்மன் குணம், ஒன்றிய அதிமுக செயலாளர்கள் அமல்ராஜ், இருளப்பன், முன்னாள் ஒன்றிய செயலாளர் சரவணன், பேரூர் செயலாளர் கணேஷ்தாமோதரன், நிர்வாகிகள் எபன் குணசீலன், ராமசாமி, குத்தாலிங்கம், சேர்மன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


Tags : Selvamohandaspandian MLA ,Narayanaperi ,
× RELATED ஓசூர் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு பணி மந்தம்