×

களக்காடு மலையடிவாரத்தில் 3வது நாளாக ஒற்றை யானை அட்டகாசம் வாழைகள் சேதம்; விவசாயிகள் அச்சம்

களக்காடு, செப். 26:  நெல்லை மாவட்டம் களக்காடு தலையணை மலையடிவாரத்தில் உள்ள விளைநிலங்களில் ஒற்றை யானை முகாமிட்டு விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. கடந்த 2 நாட்களாக சிவபுரம், புதுக்குளம் பகுதியில் 200க்கும் மேற்பட்ட ரசகதலி. ஏத்தன் வாழைகளை சேதப்படுத்தியது.  விவசாயிகளை அச்சுறுத்தி வரும் ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்ட களக்காடு புலிகள் காப்பக வனத்துறையினர் இரு குழுக்கள் அமைக்கப்பட்டு பகல், இரவில் யானை நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.  3வது நாளாக நேற்று இரவில் ஒற்றை யானை மீண்டும் ஊருக்குள் புகுந்தது. தலையணை பிரதான சாலையில் உள்ள வனபேச்சியம்மன் கோவில் மலையடிவார புதர்களில் இருந்து வெளி வந்த யானை சிவபுரம் விளைநிலங்களுக்குள் புகுந்து ராஜேந்திரன், களக்காடு நாடார் புதுத்தெருவை சேர்ந்த சுரேஷ் ஆகியோருக்கு சொந்தமான 20க்கும் மேற்பட்ட வாழைகளை சேதப்படுத்தியது. வாழை தோட்டத்தில் யானை நிற்பதை கண்ட விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். வனத்துறையினர், விவசாயிகள் இணைந்து வெடி வெடித்தும், தீப்பந்தங்களை காட்டியும் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதனால் யானை அங்கிருந்து சென்றது. தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும் என்று விவசாயிகள் கூறுகின்றனர். யானை நாசம் செய்த வாழைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kalakkad ,foothills ,
× RELATED கொரோனா பாதிப்பு 78 லட்சம் தாண்டியது