புதுச்சேரியில் பறிமுதல் செய்யப்பட்ட பல கோடி மதிப்புள்ள சாமி சிலைகள் கும்பகோணம் கோர்ட்டில் ஒப்படைப்பு

புதுச்சேரி, செப். 26: புதுச்சேரியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்ததாக பறிமுதல் செய்யப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள சாமி சிலைகளை கும்பகோணம் கோர்ட்டில் போலீசார் நேற்று ஒப்படைத்தனர். தமிழகத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பழமையான கோயில் சாமி சிலைகளை திருடி வெளிநாட்டில் விற்றதாக சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனை கடந்த 2016ம் ஆண்டு போலீசார் கைது செய்தனர். அவரது வீடுகள் மற்றும் குடோன்களில் பழங்கால கற்சிலைகள், ஐம்பொன் சிலைகள், யானை தந்தத்தால் ஆன பொருட்களை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.இதையடுத்து, புதுச்சேரியில் கலைப்பொருட்கள் விற்பனைக்கூடம் நடத்தும் புஷ்பராஜனை கைது செய்தனர். இவரது தகவலின்பேரில், புதுச்சேரி உப்பளம் கோலாஸ் நகரில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தி ரூ.50 கோடி மதிப்பிலான சிலைகளை பறிமுதல் செய்தனர். மேலும், வீட்டின் உரிமையாளர் மரியதெரசா வனினா ஆனந்தி (39) என்பவரை கைது செய்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம், ரோமன் ரோலண்ட் வீதியில் உள்ள ஜான்பால் ராஜரத்தினம் என்பவரது வீட்டில் சோதனை நடத்தி 60 ஐம்பொன் சிலைகள், 14 கற்சிலைகளை கண்டுபிடித்தனர். பின்னர், 74 சிலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இவை பல கோடி ரூபாய் மதிப்பு இருக்கும் என தெரிகிறது. இந்த சிலைகளை கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி விஜயகுமார் முன்நிலையில் நேற்று ஒப்படைத்தனர். இதுகுறித்து சிலை கடத்தல் பிரிவு போலீசார் கூறுகையில், ‘கைப்பற்றப்பட்ட சாமி சிலைகள் எந்தெந்த கோயில்களில் இருந்து எடுக்கப்பட்டது என்பது குறித்து விசாரிக்கப்படும்’ என தெரிவித்தனர்.

Related Stories:

>