விவசாயிகள் நிதி உதவி திட்ட முறைகேடு 589 பேரிடமிருந்து ரூ.23.5 லட்சம் பறிமுதல்

கோவை,செப்.26:  விவசாயிகள் நிதி உதவி திட்ட முறைகேடு தொடர்பாக கோவையில் 589 பேரிடமிருந்து ரூ. 23.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. பிரதமரின் விவசாயிகள் நிதி உதவி திட்டத்தில் தமிழக முழுவதும் முறைகேடு நடைபெற்றதாக புகார்கள் வந்தன. இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இந்த திட்டத்தின் கீழ் பயனடைந்த விவசாயிகளின் விவரம் சேகரிக்கப்பட்டு ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் கோவை மாவட்டத்தில் 599 பேர் முறைகேடாக இந்த திட்டத்தின் நிதி உதவியை பெற்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர்களிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்யும் நடவடிக்கை வேளாண்துறை அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டு வந்தது. மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கோவை மாவட்டத்தில் 599 பேர் முறைகேடாக விவசாயிகள் நிதி உதவி திட்டத்தின் நிதியை பெற்று வந்துள்ளனர். இதில் 589 பேரிடமிருந்து ரூ.23 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோவையை தவிர்த்து சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் நிலம் இருந்து அவர்களுக்கு கோவையில் உள்ள வங்கி கணக்குகளில் விவசாயிகளின் நிதி உதவி திட்டத்திற்கான பணம் செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு 1,129 பேருக்கு பிரதமரின் விவசாயிகள் நிதி உதவி திட்டத்தின் கீழ் பணம் செலுத்தப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இதில் 540 பேரிடமிருந்து பணம் முழுவதும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள நபர்களிடம் அடுத்த மாதம் இறுதிக்குள் பணத்தை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

Related Stories: