விமான நிலைய கழிவறையில் 6 தோட்டாக்கள் சிக்கின

கோவை, செப்.26:  கோவை விமான நிலையத்தில் உள்ள கழிவறையை நேற்று சுத்தம் செய்யும் பணியில் விமான நிலைய தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர். அப்போது அங்கு 6 தோட்டாக்கள் இருப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து விமான நிலைய பாதுகாப்பு படை வீரர்களுக்கு (சி.ஐ.எஸ்.எப்) தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு சென்ற சி.ஐ.எஸ்.எப். வீரர்கள் தோட்டாக்களை கைப்பற்றினர். அந்த 6 தோட்டாக்களில் பிஸ்டல்களுக்கு பயன்படுத்தும் 3 தோட்டாக்களும், ஸ்டெம் மெஷின் கன் வகை துப்பாக்கிகளில் பயன்படுத்தும் ஒரு தோட்டாவும் இருந்தன. மேலும் 2 தோட்டாக்கள் வெடிமருந்தில்லாமல் ஏற்கெனவே பயன்படுத்திய நிலையில் இருந்தன. இது குறித்து சி.ஐ.எஸ்.எப். அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த தோட்டாக்களை விமான பயணிகள் யாரேனும் எடுத்து வந்திருக்கலாம் என்றும், ஸ்கேனர் கருவியில் சிக்கிக்கொள்வோம் என்ற அச்சத்தில் கழிவறைக்குச் சென்று தோட்டாக்களை அங்கு வீசிச் சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். எனவே அந்த நபர் யார்? என கண்டறிய விமான நிலைய வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

Related Stories: