கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது

கோவை, செப்.26: கோவையில் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.  கோவை சிங்காநல்லூர் கோத்தாரி நகரை சேர்ந்தவர் முருகன் (31). தனியார் நிறுவன ஊழியர். இவர் சம்பவத்தன்று இரவு உப்பிலிபாளையம் அருகேயுள்ள சுடுகாடு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மர்ம நபர் ஒருவர் திடீரென முருகனின் கழுத்தில் கத்தியை வைத்து, ‘‘உன்னிடம் உள்ள பணத்தை கொடு. இல்லையென்றால் கொன்றுவிடுவேன்’’ என மிரட்டல் விடுத்தார். இதனால் பயந்துபோன முருகன் சட்டைப்பாக்கெட்டில் இருந்த ரூ.4,500 ஐ எடுத்து கொடுத்துவிட்டு திருடன், திருடன் என கூச்சலிட்டார். சத்தம் கேட்டு சிலர் அங்கு வந்தனர். அவர்களையும் அந்த மர்ம நபர் கத்தியை காட்டி மிரட்டி விட்டு தப்பி சென்றார். இது குறித்து முருகன் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர். அதில், பணம் பறித்தது பீளமேடு லட்சுமிபுரத்தை சேர்ந்த மோகன்பாபு (32) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து ரூ.4,150 மற்றும் கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Related Stories:

>