×

வேளாண் மசோதாக்களை திரும்ப பெற வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட 127 விவசாயிகள் கைது

ஈரோடு, செப்.26: மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாக்களை திரும்ப பெற வலியுறுத்தி ஈரோடு உள்பட 3 இடங்களில் நேற்று நடந்த மறியல் போராட்டத்தில் 127 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
வேளாண் விளை பொருள் வணிக ஊக்குவிப்பு சட்டம், அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம், விவசாயிகள் அதிகாரமளிப்பு மற்றும் பாதுகாப்பு விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகள் ஒப்பந்த சட்டம் ஆகிய 3 மசோதாக்களை கடும் எதிர்ப்புகளுக்கு இடையே மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. இந்த 3 சட்டங்களும் விவசாயிகளுக்கு எதிராகவும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் உள்ளதாக நாடு முழுவதும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, பஞ்சாப், அரியானா போன்ற மாநிலங்களில் கடந்த ஒருவாரமாக போராட்டம் நடந்து வருகிறது.

விவசாயிகளின் தொடர் போராட்டங்களால் அம்மாநிலங்களில் ரயில் சேவை 3 நாட்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, தமிழகத்திலும் விவசாயிகள், பொதுநல அமைப்புகள், அரசியல் கட்சியினர் என பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு (ஏஐகேஎஸ்சிசி) சார்பில் இன்று நாடு தழுவிய மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று தமிழகம் முழுவதும் மறியல் போராட்டம் நடந்தது. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, கோபி, கடம்பூர் உள்ளிட்ட 3 இடங்களில் நேற்று விவசாயிகள், பொதுநல அமைப்பினர், அரசியல் கட்சியினர் பங்கேற்ற மறியல் போராட்டம் நடந்தது.
ஈரோடு பஸ் ஸ்டாண்டில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (சிபிஐ) மாநில துணைத்தலைவர் துளசிமணி தலைமை வகித்தார். தமிழக விவசாயிகள் சங்கம் (கே.சி) மாவட்ட தலைவர் சுப்பு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (மார்க்சிஸ்ட் கம்யூ.,) மாநில துணைத்தலைவர் ரவீந்திரன், தற்சார்பு விவசாயிகள் சங்க நிர்வாகி சுப்பிரமணி, மக்கள் சிவில் உரிமைக்கழகம் கண.குறிஞ்சி, நீரோடை நிலவன், எஸ்.டி.பி.ஐ. லுக்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஈரோடு பஸ் ஸ்டாண்ட், சத்தி சாலை, கோபி பஸ் ஸ்டாண்ட், கடம்பூர் பஸ் ஸ்டாண்ட் ஆகிய பகுதிகளில் மறியலில் ஈடுபட்ட 127 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

Tags : withdrawal ,
× RELATED பாஜக தேசிய தலைவரான ஜெ.பி.நட்டா,...