கீழ்பவானி கசிவுநீர் திட்டத்துக்கு எதிராக விவசாயிகள் மறியல் போராட்டம் வாபஸ்

ஈரோடு, செப்.26: கீழ்பவானி கசிவுநீரை குழாய்கள் மூலம் குளங்களுக்கு கொண்டு செல்லும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற இருந்த மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

பெருந்துறை அடுத்துள்ள திருவாச்சி கிராமத்தில் கரியபெருமாள் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து அங்கு சேகரமாகும் கீழ்பவானி வாய்க்கால் கசிவு நீரை பெருந்துறை பகுதியில் உள்ள குளம், குட்டைகளுக்கு குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை பெருந்துறை பேரூராட்சி நிர்வாகம் செயல்படுத்த முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் கசிவுநீர் மூலம் பயனடைந்து வரும் நஞ்சை ஊத்துக்குளி வாய்க்கால் பாசனத்திற்குட்பட்ட 2500 ஏக்கர் நிலங்கள் தரிசாக மாறிவிடும் என்பதால் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும், வரும் 28ம் தேதி மொடக்குறிச்சி லக்காபுரத்தில் மறியல் போராட்டம் நடத்தவும் முடிவு செய்திருந்தனர். இந்நிலையில், இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் முத்தரப்பு கூட்டம் நேற்று முன்தினம் மொடக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தாசில்தார் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். கோயில் செயல் அலுவலர், விவசாய சங்க நிர்வாகிகள் குமாரசாமி, பெரியாசாமி, சுப்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இத்திட்டம் பாசன விவசாயிகளை பாதிக்கும் சூழல் உள்ளதால் இது தொடர்பாக கலெக்டர் தலைமையில் முத்தரப்பு கூட்டம் அடுத்த மாதம் முதல் வாரத்தில் ஈரோட்டில் நடத்துவது எனவும், எனவே மறியல் போராட்டம் வாபஸ் பெறுவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

Related Stories:

>