இழப்பீடு வழங்க கோரி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்ட விவசாயிகள்

ஈரோடு, செப்.26:இழப்பீடு தொகை வழங்கக்கோரி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ஈரோடு திண்டல் மேடு முதல் நாமக்கல் மாவட்டம் கொக்கராயன் பேட்டை வரை ரிங்ரோடு அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. கொக்கராயன் பேட்டை முதல் லக்காபுரம் வரையும், லக்காபுரம் முதல் ஆனைக்கல்பாளையம் வரையும் பணிகள் முழுமையாக முடிந்து வாகன போக்குவரத்து இருந்து வருகிறது.ஆனைக்கல்பாளையம் முதல் ரங்கம்பாளையம் வரையும், ரங்கம்பாளையம் முதல் திண்டல் மேடு வரையும் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக பணிகள் முழுமையாக முடியவில்லை. இந்நிலையில், திண்டல் மேடு, பவளத்தாம்பாளையம் ஒட்டிய பகுதிகளில் ரிங்ரோடு நில அளவை செய்யப்பட்ட பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறையினர் பணிகளை தொடங்கி உள்ளனர். இந்நிலையில், சில விவசாயிகளுக்கு முழுமையான இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் இழப்பீடு தொகையை வழங்க கோரி பணியில் ஈடுபட்டிருந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

>