×

திருவள்ளூர் கூட்டு சாலையில் கன்டெய்னர் - அரசு பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து: 3 பேர் படுகாயம்

புழல்: எண்ணூர் அருகே உள்ள காட்டுப்பள்ளி துறைமுகத்துக்கு கொண்டு செல்வதற்காக கர்நாடகா மாநிலம் கணக்கு புறா என்ற இடத்திலிருந்து 100  டன் எடை கொண்ட கிரானைட் கற்களை ஏற்றிக்கொண்டு கன்டெய்னர் லாரி  ஒன்று நேற்று காலை திருவள்ளூர் கூட்டு சாலையில் இருந்து   பாடியநல்லூர் வழியாக வந்துகொண்டிருந்தது.  அதே நேரத்தில் பாடியநல்லூர் பணிமனையில் இருந்து ஊத்துக்கோட்டை செல்வதற்காக மாநகர  பேருந்து ஒன்று வெளியே வந்தது. இந்நிலையில்,  சிக்னல் அருகே வந்த அரசு பேருந்து மீது கன்டெய்னர் லாரி எதிர்பாராத விதமாக பயங்கரமாக மோதியது. அப்போது,  லாரியில்  இருந்து கிரானைட் கற்கள் சிதறி சாலையில் விழுந்தன. இதனால், அவ்வழிேய மோட்டார் சைக்கிளில் சென்ற ஆட்டந்தாங்கல் பகுதியை சேர்ந்த  சரவணன் (44), அவரது மகன் ராம் (16) மற்றும் மற்றொரு  வாகனத்தில் வந்த ஆவடி சேக்காடு குளக்கரை தெருவை சேர்ந்த குப்புசாமி (34) ஆகிய  மூவரும் இந்த கற்களில் இடறி  சாலையில் விழுந்து பலத்த காயம் அடைந்தனர்.

இதனை கண்ட அப்பகுதியினர் வலியால் துடித்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  கன்டெய்னர் லாரி மோதியதால், மாநகர பேருந்தும், சாலையோரம் இருந்த மின்கம்பமும் சேதமடைந்தன. இதுகுறித்து, தகவல் அறிந்த மாதவரம்  போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.  பின்னர், இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர  விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், விபத்தின்போது தப்பியோடி தலைமறைவாக உள்ள லாரி டிரைவர் வீரேஷ் என்பவரை போலீசார் வலைவீசி  தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Tags : Tiruvallur ,road ,
× RELATED விருத்தாசலம் அருகே அரசுப் பேருந்தும்...